கொடநாடு எஸ்டேட் கொள்ளை சம்பவம் – தெஹல்ஹா ஆவணப்படம்

கொடநாடு எஸ்டேட் கொள்ளை சம்பவம் – தெஹல்ஹா ஆவணப்படம்

கொடநாடு எஸ்டேட் கொள்ளை- கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்தின் விசாரணையில் நிற்கவே தகுதியற்ற ஓர் விஷயத்தை சாரம்சமாகக் கொண்டு ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளதில் உள்நோக்கம் உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தின் போது, அங்கு காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும், கிருஷ்ணபகதூர் என்ற மற்றொரு காவலாளி படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த வழக்கில் இவர் தான் ஒரே சாட்சியாக இருந்தார்.

அடுத்த சில தினங்களில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது உடன்பிறவா தோழி சசிகலா ஆகியோரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்த கனகராஜ், இந்த சம்பவங்களுக்கு காரணமாக கருதப்பட்ட நிலையில் சாலை விபத்தில் பலியானார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த கொடநாடு கொள்ளை -கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அவர் நேரடியாக பேட்டி எடுத்துள்ளார். 

இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடைபெற்றது, எவ்வாறு திட்டமிட்டோம்,  எப்படி செயல்படுத்தினோம் என்பது குறித்து அவர்கள் பேசுகின்றனர். 

இதில் முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம்,நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் சொல்லியதாக குற்றவாளி சயன் கூறுகிறார்.  மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும் கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் தான் உள்ளனர் என்பது போன்றும் அதில் காட்டப்பட்டுள்ளது. 

இருந்தபோதிலும் இத்தகைய ஆவணப்படம் எடுத்துள்ள நபர், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்பதாலேயே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த பத்திரிகை உண்மையின் சாயல் எதுவுமின்றி முக்கிய நபர்கள் குறித்து நேரடி சாட்சியங்கள் இன்றி, உள்நோக்கத்துடன் பரபரப்பை உருவாக்கும் நோக்கில் அவ்வப்போது ஏதாவது செய்திகளை வெளியிட்டு வந்தது நாடறிந்த செய்தியாகும்.

தற்போதும்  நீதிமன்றத்தில் நிறுத்தினால் சாட்சி கூறிய நபர்களின் இந்த வீடியோ வாக்குமூலம், சாட்சியாக நிற்கவே வாய்ப்பில்லை எனத் தெரிந்தும், உள்நோக்கத்துடன் வேறு யாருக்கோ சாதகமான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.