டி அண்ட் ஓ உரிமம் பெறுவதில் சிக்கல்:மாநகராட்சி மவுனத்தால் நிதியிழப்பு

டி அண்ட் ஓ உரிமம் பெறுவதில் சிக்கல்:மாநகராட்சி மவுனத்தால் நிதியிழப்பு

மதுரை:மதுரை மாநகராட்சியில் கடைகள், வணிக, தொழில் நிறுவனங்களுக்கான டி அண்ட் ஓ உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளால் 60 சதவீத நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் நிதியிழப்பு ஏற்படுகிறது.
சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அபாயகரமானதும் ஆட்சேபனைக்குரியதுமான பொருட்கள் பயன்படுத்துவது இல்லை என்பது குறித்து மாநகராட்சி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கவும் வேண்டும். நகரில் 80,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டாலும் இந்த உரிமங்கள் பெற்றுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 28,682 மட்டுமே. மீதமுள்ள நிறுவனங்கள் டி அண்ட் ஓ., புதுப்பிக்காமல் இருப்பதால் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.
வழக்கமாக வரிவசூல் மையங்களில் இதற்கான கட்டணத்தை செலுத்தி உரிமம் புதுப்பிப்பது வழக்கம். சமீபத்தில் இதற்கான கட்டடணத்தொகை எவ்வளவு என வார்டு சுகாதார அலுவலரிடம் கேட்டு அவர் ஒப்புதலில் கட்டணத்தொகை செலுத்தும் நடைமுறை இருப்பதால் பலர் இதற்கான நேரத்தை செலவிட விரும்பவில்லை. மாநகராட்சிக்கு இதன் மூலம் வருவாயும் கிடைக்கவில்லை.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை நிறுவனங்களுக்கும் அதற்குரிய கட்டணத் தொகையை வெளிப்படையாக அறிவிப்பு செய்து அதனை மாநராட்சியின் வரிவசூல் மையங்களில் நேரடியாக செலுத்தும் நடைமுறையை பின்பற்றினால் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதற்கான கட்டணங்களை நிலுவைகள் இல்லாமல் செலுத்த முடியும். இந்த நடைமுறையினால் கட்டணம் செலுத்துவதற்கான பேரங்களும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். மாநகராட்சிக்கு ஏற்படும் நிதிஇழப்புகளை தவிர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.