மஹிந்த கட்சி மாறவில்லை என இலங்கை சபாநாயகருக்கு கடிதம்…

மஹிந்த கட்சி மாறவில்லை என இலங்கை சபாநாயகருக்கு கடிதம்…


படத்தின் காப்புரிமை BUDDHIKA WEERASINGHE

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே அங்கம் வகிப்பதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது அந்தக் கூட்டணி.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சி மாறி பொதுஜன பெரமுனவில் உறுப்பினரானதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியே பறிபோய்விட்டதாகவும், எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது என்றும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Facebook/ Mahindaanthan Aluthgamage

Image caption நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட, தாமரை மொட்டு சின்னம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில், கடந்த நவம்பர் மாதம் மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினராக சேர்ந்தார்.

இதனையடுத்து, அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் எந்தக் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாரோ, அந்தக் கட்சியிலிருந்து விலகுவதன் மூலம் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகும் என்கிற வாதம் தற்போது முன்வைக்கப்பட்டு வருதோடு, நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சட்டச் சிக்கல் உருவானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாகவும், அவர் கட்சி மாறவில்லை எனவும் நிரூபிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே உள்ளார் என்றும், எனவே அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் தடைகள் எவையும் இல்லை என்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திரக் கட்சியில் அங்கத்துவப் பணத்தை மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செலுத்தி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த மாதம் கூட, மஹிந்த ராஜபக்ஷவின் சம்பளத்திலிருந்து மூவாயிரம் ரூபா பணம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குக்கு உறுப்பினர் நிதியாகச் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

Image caption சபாநாயகர் கரு.ஜெயசூர்ய

அப்போது ஊடகவியலாளர்கள்; “பொதுஜன பெரமுன கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினராகும் நிகழ்வு, அவரின் விஜேராம இல்லத்தில் மிகப்பெரும் நிகழ்வாக இடம்பெற்றதல்லவா” என, நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த அளுத்கமகே, “அது குறித்து பொதுஜன பெரமுன கட்சி செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே உறுப்பினராக இருக்கிறார் என்பதை என்னால் கூற முடியும் என்றார்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ கட்சி மாறியமை தொடர்பிலும், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலை செல்லுபடியாகுமா என்பது குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தவாறே உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.