மேகாலயா: சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு?

மேகாலயா: சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியை கைவிட அரசு முடிவு?

ஷில்லாங்,
மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது. சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
இந்த தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி வலை’ என்று அழைக்கப்படுகிறது.
கடந்த மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.  ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 
இந்த நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேகாலய முதல் மந்திரி கோனர்டு சங்மா கூறியதாவது:- “ மீட்புப் பணி மிகப்பெரும் சவாலான பணியாக திகழ்கிறது.  லிட்டர்கள் கணக்கில் நாங்கள் பம்புகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றுகிறோம். ஆனால், மறுநாளே சுரங்கத்தில் தண்ணீர் மீண்டும் பெருகிவிடுகிறது. குறைந்தபட்சம் 15 மணி நேரம் மீட்பு பணிகளை நடத்துமாறு கோல் இந்தியா மற்றும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இதன்பிறகு ஏற்படும் நிலவரத்தை பொறுத்து, மீட்பு பணி பற்றி முடிவு எடுப்போம். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 
முன்னதாக, நிபுணர்களின் உதவி பெற்று மீட்பு பணிகளை தொடருங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் மேகாலய அரசையும் நேற்று கேட்டுக்கொண்டது. மேலும், சட்டத்துக்கு விரோதமாக இயங்கி வரும் சுரங்கங்கள் குறித்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேகலாயா அரசிடம் கேள்வி கேட்டது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.