ஐயப்பன்தாங்கலிலிருந்து பெரியகொளுத்துவாஞ்சேரி வழியாக மவுலிவாக்கத்துக்கு சிற்றுந்து

சென்னை,பிப்.14–

ஐயப்பன்தாங்கலிலிருந்து பெரியகொளுத்துவாஞ்சேரி வழியாக மவுலிவாக்கத்துக்கு சிற்றுந்து இயக்க பரிசீலனை செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் தா.மோ. அன்பரசன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட ஐயப்பன்தாங்கல் – பெரியகுலத்துவாஞ்சேரி – மதுரம் நகர் வழியாக மவுலிவாக்கம் செல்ல சிற்றுந்து இயக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.

அதற்கு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், தற்போது எஸ்.22 என்ற வழித்தடத்தில் 3 சிற்றுந்துகள் ஐயப்பன்தாங்கல், ராஜரத்தினம் நகர் வழியாக இயக்கப்படுகிறது. ராஜரத்தினம் நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 0.6 கிலோ மீட்டர்க்குள்ளாகவும், ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 0.8 கிலோ மீட்டர்க்குள்ளாகவும் பெரியகொளுத்துவாஞ்சேரி உள்ளது. மேலும் மாநகர பேருந்துகள் ஐயப்பன்தாங்கல், பெரியகொளுத்துவாஞ்சேரி, மவுலிவாக்கம் பகுதிகளில் பிரதான சாலையில் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், இப்பகுதியில் சிற்றுந்து இயக்கிட தற்போது அவசியம் இல்லை. அதிகாரிகள் கொடுத்துள்ள புள்ளி விவரப்படி 600 மீட்டர், 800 மீட்டர் என்ற அளவில் உள்ளது. ஆனால் உறுப்பினர் சுமார் 3 கிலோ மீ்ட்டர் நடந்து வந்து ஐயப்பன்தாங்கல் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே அந்த வழித்தடம் குறித்து ஆய்வு செய்யப்படும். பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து அந்த வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதிக பேருந்துகளும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் நடைகளின் எண்ணிக்கை சற்று குறைந்தும் இயக்கப்படுகின்றன. நஷ்டத்தை குறைக்கவே பயணிகள் எண்ணிக்கை குறைந்த இடங்களில் குறைந்த நடைகளும், அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்தால் அதிக நடைகள் இயக்கப்பட்டு வழித்தட சீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.