குண்டம் விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்: பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஜரூர்

குண்டம் விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்: பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஜரூர்

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவுக்காக, கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமான ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா, கடந்த, 4ம் தேதி கொடியேற்றுதலுடன் துவங்கியது. வரும், 17ம் தேதி இரவு மயான பூஜையும், 19ம் தேதி காலை குண்டம் கட்டுதல், மாலையில் சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு குண்டம் பூ வளர்த்தல் நடக்கிறது.

வரும், 20ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்காக கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மயான பூஜை, குண்டம் இறங்கும் நிகழ்வைக் காண அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள். அதனால், கோவில் வளாகம், குண்டம் இறங்கும் வளாகம் மற்றும் மயான பூஜை நடக்கும் இடங்களில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படுகிறது.

குண்டம் வளாகத்திலுள்ள தடுப்புக்களில், தற்காலிக குடிநீர் குழாய் அமைத்து வருகின்றனர். குண்டம் வளாகத்துக்கு வெளியில், சேத்துமடை ரோட்டோரத்தில் குண்டம் இறங்கும் நிகழ்வை காண, இரண்டு பெரிய எல்.இ.டி., டிவிக்கள் பொருத்தி, ‘ஹெலிகேம்’ மூலம் குண்டம் இறங்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். மேலும், பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படுகிறது. கூடுதல் தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.

கோவில் உதவி கமிஷனர் ஆனந்த் கூறுகையில், ”குண்டம் இறங்குமிடத்தில், மூவாயிரம் லிட்டர் கொள்ளவுள்ள தண்ணீர் தொட்டி அமைத்துள்ளோம். 18 இடங்களில் தற்காலிக குழாய் அமைத்து, குடிநீர் வழங்கப்படும்.மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புகள் அமைக்கப் படுகிறது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குண்டம் வளாகத்தில் புதைமின் வடம் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.