இஸ்லாம் மதத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்: முக்தார் அப்பாஸ் நக்வி

இஸ்லாம் மதத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம்: முக்தார் அப்பாஸ் நக்வி

பயங்கரவாதமானது, இஸ்லாம் மதத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகப்பெரிய எதிரி என்று சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
தில்லியில், ஈரான் நாடாளுமன்றத்தின் கலாசாரத்துக்கான குழுவினரை, நக்வி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட பிராந்தியத்துக்கோ, குறிப்பிட்ட நாட்டுக்கோ எதிரான அச்சுறுத்தல் அல்ல. அது, உலகின் மனித மாண்புகளுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்போரை தனிமைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுசேர வேண்டும். பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகளால் இஸ்லாம் மதம் ஒரு பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில், பயங்கரவாதம் என்பது இஸ்லாம் மதத்துக்கும், மனிதநேயத்துக்கும் மிகப்பெரிய எதிரியாகும். உலகில் அமைதி, வளர்ச்சி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும். 
சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நாம் பலப்படுத்த வேண்டும். சமூக மற்றும் மத நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த உதாரணமாக இந்தியா இருக்கிறது.  இந்தியாவில் உள்ள நூற்றாண்டுகால பழமை வாய்ந்த கலாசாரமும், வேற்றுமையில் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பும் தேசத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. 
நாட்டில் சிறுபான்மையினருக்கான, அரசமைப்பு, அரசியல் மற்றும் சமூக ரீதியிலான உரிமைகள் பாதுகாப்பாக உள்ளன என்று முக்தார் அப்பாஸ் நக்வி பேசினார்.
முன்னதாக, ஈரான் நாடாளுமன்றக் குழுவுடனான பேச்சுவார்த்தையின்போது, வக்ஃபு வாரிய நிர்வாகம், ஹஜ் மற்றும் ஜியரத் தொடர்பான விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.