ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு | France decides to dispose of Masud Azar assets head of Zeus-e-Mohammed

ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு | France decides to dispose of Masud Azar assets head of Zeus-e-Mohammed

புதுடெல்லி: ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா சபை ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் (50), புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல நாச வேலைகளுக்கு மூளையாக செயல்பட்டவர். இவரையும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு இந்திய நேரப்படி நேற்று முன்தினம் முடிந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இந்த தீர்மானம் பற்றி ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என சீனா கேட்டதால் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. அவரது பெயரை ஐரோப்பிய யூனியனின் தீவிரவாதிகள் சந்தேக பட்டியலில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து பிரான்ஸ் பொருளாதாரத்துறை, நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி நடந்த தாக்குதலில் இந்திய போலீசார் 40 பேர் பலியாயினர். இதற்கு ஐ.நா வால் தடைசெய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.