தேனியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த டி.ஐ.ஜி!

தேனியில் பதற்றமான வாக்குச்சாவடிகளைத் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளில், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,783 வாக்குச்சாவடிகளில் 204 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோசி நிர்மல் குமார் கடந்த 13-ம் தேதி தேனி வந்திருந்தார்.அன்று, பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்திருக்கும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து 14-ம் தேதி வாக்கு எண்ணும் மையமான கொடுவிலார்பட்டி கம்மவர் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தார். இன்று (15.3.2019) பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட டி.ஐ.ஜி, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.