30 ஆயிரம் ஓட்டுசாவடிகளை கண்காணிக்க வெப் கேமரா அமைக்கும் டெண்டரில் விதிமீறல் | Infringement of a webcam camera tender to monitor 30 thousand drivers

30 ஆயிரம் ஓட்டுசாவடிகளை கண்காணிக்க வெப் கேமரா அமைக்கும் டெண்டரில் விதிமீறல் | Infringement of a webcam camera tender to monitor 30 thousand drivers

கோவை:  தமிழகத்தில் ஓட்டு சாவடிகளுக்கு ‘வெப் ஸ்ட்ரீம்மிங் கேமரா’ அமைக்கும் டெண்டரில் விதிமுறை மீறல் நடந்திருப்பதாக தெரிகிறது.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 39 தொகுதிகளில் சுமார் 64 ஆயிரம் ஓட்டு சாவடி அமைக்கப்படவுள்ளது. இதில் 30 ஆயிரம் ஓட்டு சாவடிகளுக்கு வெப் ஸ்ட்ரீம்மிங் (இணையத்தில் நேரடி ஒளிபரப்பு)  கேமரா அமைக்க திட்டமிடப்பட்டு, தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் வருவாய் துறை சார்பில் கடந்த 22ம் தேதி டெண்டர் விடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டு சாவடி, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் வசதியுடன் வெப் ஸ்ட்ரீம்மிங் கேமரா அமைக்கவேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறை, மாநில தேர்தல் கட்டுபாட்டு அறைகளில் எல்.இ.டி. டிவி இருக்கவேண்டும். ஓட்டு பதிவு, மக்கள் நடமாட்டம், ஏஜன்ட் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தெளிவாக தெரியும் வகையில் வெப் கேமரா 4 ஜி அலைவரிசையில் இருக்கவேண்டும் என நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

கடந்த 5ம் தேதி டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு ஆய்விற்கு எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஓட்டு சாவடிக்கு வெப்கேமரா அமைத்து ஓட்டு பதிவுகளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காணிக்க 6,190 ரூபாய் என நிர்ணயிக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த காலங்களில் வெப் கேமரா திட்ட பணிகளுக்கு குறைந்த தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் தேதி ஆந்திராவில் வெப் கேமரா கண்காணிப்பு பணிக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதில் தேர்தல் கமிஷன் ஒரு ஓட்டு சாவடிக்கு 4,500 ரூபாய்க்கு என்ற அடிப்படையில் தொகை நிர்ணயம் செய்திருந்தது. இதேபோல் மற்ற மாநிலங்களில் வெப் கேமரா பணிகளை நடத்த உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் ஆந்திராவை காட்டிலும் ஒரு ஓட்டு சாவடிக்கு 1,690 ரூபாய் கூடுதல் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் குறைந்த தொகையில் டெண்டர் கேட்டிருந்த சில விண்ணப்பங்களை தேர்தல் கமிஷன் நிராகரித்து, அதிக தொகை கேட்ட விண்ணப்பத்தை தேர்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கமிஷன் நிர்ணயம் செய்த தொகையில் வெப் கேமரா அமைத்து ஓட்டு சாவடிகளை கண்காணிக்க 18.57 கோடி ரூபாய் செலவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தை அடிப்படையாக கொண்டு,  வெப் கேமரா பணிகளுக்கு ஒப்பந்தம் இறுதி செய்திருந்தால் தேர்தல் கமிஷன் 13.50 கோடி ரூபாய் செலவில் வெப் கேமரா அமைக்க முடியும். அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வெப் கேமரா பணிகளுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் 5 கோடி ரூபாய் கூடுதலாக அவசர கதியில் ஒப்புதல் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, பார்வையாளர் குழுவினருக்கு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த வீடியோ கிராபர் குழுவிலும் விதிமுறை மீறல் இருப்பதாக தெரிகிறது. வீடியோ பணியில் இல்லாத சிலர், போலியான ஆவணங்களை ஒப்படைத்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் ஒப்பந்தம் பெற்றிருப்பதாக தெரிகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது வீடியோ ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. வீடியோ கிராபர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய தொகை வழங்கவில்லை. இதற்கு பல மாவட்டங்களில் வீடியோ கிராபர்கள் எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தினர். இந்த முறையும் குறைபாடுகள் சரி செய்யாமல் முறைகேடாக டெண்டர் இறுதி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.