ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

மும்பை,

மும்பையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

அதில் கேப்டன் விராட் கோலி 8 ரன்னிலும், பார்திவ் படேல் 28 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. மேலும் இருவரும் அரை சதம் பதிவு செய்து அசத்தினர். அதில் மொயின் அலி 50 ரன்களில் கேட்ச் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன்  75 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய அக்‌ஷ்தீப் நாத் 2 ரன்னிலும்,பவன் நெகி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

முடிவில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ரன்கள், மொயின் அலி 50 (32) ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய மலிங்கா 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க மும்பை அணியில் டி காக், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த அந்த ஜோடியில் ரோகித் சர்மா 28(19) ரன்களும், டி காக் 40(26) ரன்களும் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய இஷான் கிஷான் 21(9) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 29(23) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக குர்னால் பாண்ட்யா 11(21) ரன்னில் கேட்ச் ஆனார்.

இறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 37(16) ரன்களும்,  பொல்லார்டு 0ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.