உ.பி.யில் தேர்தலுக்காக வந்த நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

உ.பி.யில் தேர்தலுக்காக வந்த நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்குப் பணப் பட்டுவாடா நடைபெறுவதைக் கண்காணித்து கட்டுக்கட்டாக பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. உ.பி.யிலோ இதற்கு மாறாக நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இங்கு வன்முறைக்கு வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை புலந்த்சாஹர் என்ற இடத்தில் மட்டும் 405 துப்பாக்கிகளும் 739 தோட்டாக்களும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயமும் மேலும் ரூ.1.5 கோடி பணம் ரொக்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணை மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக புலந்த்சாஹர் மூத்த காவல் கண்காணிப்பாளர் என்.கோலாஞ்சி தெரிவித்தார்.

மதுபானக் கடைகளுக்கு பின்புறம் இவ்வாயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மறைத்து வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலை முன்னிட்டு வன்முறை நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், பாதுகாப்பு அதிக அளவில் பலப்படுததப்பட்டு வருவதாகவும் கோலாஞ்சி தெரிவித்தார்.

புலந்த்சாஹரில் ஏப்ரல் 18 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போலா சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யோகேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் பான்சி லால் பஹாடியாவும் போட்டியிடுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.