எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் கமிஷன் வருவதாக ஸ்டாலின் கூறுவது பொய்: முதல்வர் கே.பழனிசாமி விளக்கம்

எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் கமிஷன் வருவதாக ஸ்டாலின் கூறுவது பொய்: முதல்வர் கே.பழனிசாமி விளக்கம்

எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் எனக்கு கமிஷன் வருவதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பொய் என்று, முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறனை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸுக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரவு, கேரளாவில் எதிர்ப்பு. கொள்கை இல்லாத கட்சிகள், திமுக தலைமையில் கூட்டணி அமைத்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரதமராக அறிவித்த நேரம், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கர்நாடகாவில் காவிரி ஆணையம் கலைக்கப்படும் எனவும், தமிழகத்தில் காவிரி ஆணையம் செயல்படும் எனவும் ராகுல் பேசுகிறார். இதற்கு ஸ்டாலின் என்ன சொல்கிறார்? எட்டுவழிச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தருவதாக, மத்திய அமைச்சரே உறுதி அளித்துள்ளார்.

கோவை, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்தான் எட்டுவழிச் சாலைத் திட்டம். இதில் மாநில அரசின் வேலை, நிலத்தை எடுத்து கொடுப்பது மட்டும்தான். எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் எனக்கு ரூ.4000 கோடி கமிஷன் வருவதாக ஸ்டாலின் கூறுவது பச்சைப் பொய். ஒப்பந்தம் இணையத்தில் நடத்தப்படுகிறது. ஸ்டாலின் காலத்தில் பெட்டியில் ஒப்பந்தம் போட்ட நினைப்பில் அவர் பேசி வருகிறார். தற்போதைய முறையில் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை. காங்கயம் காளையின் பெருமையை பறைசாற்றும் வகையில், காங்கயத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளார். வைகோவைவிட திமுகவை அதிக விமர்சனம் செய்தவர்கள் யாருமில்லை. இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது கருணாநிதி, திமுக – காங்கிரஸ் ஊழல் கூட்டணி என்று கூறியவர் வைகோ.

மதிமுகவுக்கென சின்னம் இருக்கும்போது, ஏன் திமுக சின்னத்தில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான், அதன் சின்னத்தில் போட்டியிட முடியும். கணேசமூர்த்தி திமுக உறுப்பினரா அல்லது மதிமுக உறுப்பினரா என்பதை வைகோ தெளிவுபடுத்த வேண்டும். வைகோவுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை மறந்து, சுயநலத்துக்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.