“எட்டு கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருட்டு?” – ஐடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

“எட்டு கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருட்டு?” – ஐடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த 7.82 கோடி மக்களின் ஆதார் தகவலை திருடியதாக எழுந்த புகாரின் பேரில் ஐடி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கு தேசம் கட்சிக்கான ‘சேவா மித்ரா’ என்ற செயலியை ஐடி கிரிட்ஸ் என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த 7.28 கோடி மக்களின் ஆதார் தகவல்களை திருடியதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஐடி நிறுவன வளாகத்தில் தெலங்கானா போலீசார், ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு தகவல்கள் திருடப்பட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தெலங்கானா மாநில தடய ஆய்வகம் ஆதார் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளது.

ஆதார் சேவை வழங்கி வரும் ‘உதய்’யில் இருக்கும் தகவல்கள் அப்படியே ஐடி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் தகவல்களோடு ஒத்துப்போனதன் மூலம் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உதய், அந்த ஐடி நிறுவனம் மீது மாதாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஆதார் மற்றும் வாக்காளர்கள் விவரங்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் சில வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் தகவல்கள் வைத்துள்ள மத்திய ஆதார் தகவல் மையத்திலிருந்தோ அல்லது மாநில ஆதார் தகவல் மையத்திலிருந்தோ இந்தத் தகவல்கள், ஐ.டி. கிரிட்ஸ்  நிறுவனத்தால் திருடப்பட்டிருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆதார் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தகவல் திருட்டு தொடர்பாக 30 வழக்குகளை உதய் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.