தமிழகத்தில் இருப்பது அதிமுக ஆட்சி இல்லை, மோடி ஆட்சி தான் உள்ளது :ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சனம் | In Tamil Nadu, there is no AIADMK regime, Modi’s regime: Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu

தமிழகத்தில் இருப்பது அதிமுக ஆட்சி இல்லை, மோடி ஆட்சி தான் உள்ளது :ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சனம் | In Tamil Nadu, there is no AIADMK regime, Modi’s regime: Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu

சென்னை: தமிழகத்தில் இருப்பது அதிமுக ஆட்சி இல்லை, மோடி ஆட்சி தான் உள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று மாலையுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் வருகிற ஏப்.18ம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டபேரவை இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக, தீவிர பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது.

சந்திரபாபு நாயுடு அண்ணா அறிவாலயம் வருகை

இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். திருவாரூரில் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுடன் சந்திப்பு

இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது இருப்பது அதிமுக அரசு இல்லை; மோடி ஆட்சிதான் உள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தின் கோரிக்கைகள் எதற்கும் பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் மோடி ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கி உள்ளது என்றும் இந்திய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார் என்றும் எடுத்துரைத்தார். இதனிடையே தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக பார்க்க ஆசைப்படுவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது,

*தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் – தம்பி உறவு போன்றது

*குடிமக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிப்பது ஜனநாயகத்தை ஏமாற்றுவதற்கு சமம்.

*தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது சரியான நடைமுறை அல்ல.

*மக்கள் தொகை அதிகம் உள்ள 10 நாடுகளில் 3-ல் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

*தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை. வாக்குச்சீட்டு முறையைத் தான் பயன்படுத்துகின்றன.

*அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம்

*அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்.

*டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா?

*மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

*பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 2% சரிந்து உள்ளது.

*வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு பெருமளவு அதிகரித்து உள்ளது.

*பணமதிப்பு ரத்து நடவடிக்கை சரியானது அல்ல என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

*அனைத்து நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும் கருப்பு பணம் விளையாடுகிறது.

*கருப்பு பணத்தை முற்றிலும் ஒழித்துவிட்டதாக மோடி அரசு கூறியது.

*கருப்பு பணம் இப்போது  எங்கிருந்து வந்தது என்றும் சந்திரபாபு நாயுடு வினவினார்.

மேலும் ரிசர்வ் வங்கி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்பட அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள மத்திய அரசு நினைப்பதாக சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.