மகேந்திரன் இல்லையெனில் தமிழ் சினிமா பின்தங்கியே இருந்திருக்கும்: நடிகர் நாசர் புகழாரம்

மகேந்திரன் இல்லையெனில் தமிழ் சினிமா பின்தங்கியே இருந்திருக்கும்: நடிகர் நாசர் புகழாரம்

இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் இல்லையெனில் தமிழ் சினிமா 30 வருடங்கள் வரை பின்தங்கியே இருந்திருக்கும் என்று நடிகர் நாசர் புகழாரம் சூட்டினார்.
 மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் பேசியது:
 மகேந்திரனைப் பற்றி நினைவுகூருகிற ஒவ்வொரு விஷயமும், அவருக்குப் பெருமை சேர்க்கிற விஷயம். மிக முக்கியமான ஆளுமைகளில் உச்சியில் இருந்த இயக்குநராக மகேந்திரனை நான் பார்க்கிறேன். அவர் சினிமாவை கையாண்ட விதம் பாடப் புத்தகம்போல் இருக்கிறது. அவர் வெகுஜன சினிமாவுக்காக எழுதிக் கொண்டிருந்தபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட கடன் அது என்றபோது அருமையாக எழுதினார். ஆனால், அவரே சினிமாவை கையாளுகிற போது, எழுதியதை விட்டு விட்டார். வித்தியாசப்பட்டார். அதனால்தான் அவர் மேன்மை மிக்கவர். சினிமாவைப் புரிந்து கொண்டு எழுதியதை விட்டதுதான் அவரது சிறப்பு. அதற்கு முன் வலிமையான அமைதி, சினிமாவில் இருந்ததில்லை. அமைதியை அமைதியாகவே திரையில் தவழ விட்டார். சினிமாவுக்கு புது இலக்கணம் கொண்டு வந்தார். சினிமாவின் பொற்காலம் அதுதான்.
 பங்களிப்பு அளப்பரியது: சினிமாவுக்காக அவர் கொடுத்த பங்களிப்பு என்பது அளப்பரியது. அவர் தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு சினிமாவைக் கையாண்டார். அதை புத்தகமாக எழுதியிருக்கிறார். சினிமாவை கற்றுக் கொள்ள நினைக்கிற மாணவனுக்கு அது முக்கியமான புத்தகம். தான் கற்ற சினிமாவை மாணவர்களுக்கு சொல்லித் தரவும் தயங்கியதில்லை.
 மகேந்திரன், பாலுமகேந்திராவின் எதார்த்த சினிமாக்கள் வராமல் போயிருந்தால், 30 வருடங்கள் வரை தமிழ் சினிமா பின் தங்கியே இருந்திருக்கும். 60 ஆண்டுகால தமிழ் சினிமாவை தடம் மாற்றிய வித்தகர், சினிமா பற்றி கற்றுக் கொண்டே இருந்தார். அதனால்தான் அவர் என்றுமே பெருமையானவர் என்றார் நாசர்.
 கூட்டத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் கே. பாக்யராஜ், பேரரசு, மனோஜ்குமார், “யார்’ கண்ணன், கதாசிரியர் கலைமணி, இயக்குநர் “பசி’ துரை, படத் தொகுப்பாளர் மோகன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் மகேந்திரன் பற்றிய நினைவுகளைப் போற்றி பேசினார்கள்.
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.