ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? – அந்த நான்கு விஷயங்கள்!

ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? – அந்த நான்கு விஷயங்கள்!

ந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தலோடு, காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற உள்ளன. ஏற்கெனவே, நடப்பது மைனாரிட்டி ஆட்சி என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆளும் அ.தி.மு.க-வுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.

வேலூரில் பிடிபட்ட பணம்

அதற்கு ஏற்றார்ப்போல அ.தி.மு.க-வும் நாடாளுமன்றத் தொகுதிகளைவிட இடைத்தேர்தல் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத் தேர்தல் களத்தில் வேலூர், தூத்துக்குடி, கரூர், ஆண்டிபட்டி ஆகியவை அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளாக மாறியுள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையமும் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றனவா என எதிக்கட்சிகள் சந்தேகக் குரல்களை எழுப்பினர். இந்நிலையில்,  அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது தமிழக அரசியலில் தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து நிகழ்த்திய அந்த  4 சம்பவங்கள்.

வேகமெடுத்த வேலூரும் தேர்தல் ரத்தும்:

வேலூரில் தி.மு.க பொருளாளரின் மகன் கதிர் ஆனந்த், அ.தி.மு.க சார்பில்  ஏ.சி.சண்முகம் என வலுவான வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அதிகம் பணப் புழக்கம் நிறைந்த தொகுதியாகவும் அறியப்பட்டது. துரைமுருகன் வீட்டில் அடுத்தடுத்து  சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் ரத்தில் வந்து நின்றுள்ளது.

ஆண்டிபட்டியும் அ.ம.மு.க-வும்:

பிரதான எதிர்க்கட்சி தி.மு.க ஒருபுறமிருக்க, தங்களின் உதிரிக் கட்சியின் செல்வாக்கைக் குறைக்க அ.தி.மு.க தீவிரம்காட்டிவருகிறது. ஆர்.கே நகரில் குக்கரிடம் இழந்த செல்வாக்கை, ஆண்டிபட்டியில் பரிசுப்பெட்டியிடம் மீட்டுருவாக்கம் செய்ய முயல்கின்றனர். ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகத்தில் வருமான வரித்துறை  விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அ.ம.மு.க நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கையில், போலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தச் சோதனையில், ரூ.1.48 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. வேலூரைத் தொடர்ந்து ஆண்டிபட்டியிலும் தேர்தல் ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆண்டிபட்டியில் அ.ம.மு.க செல்வாக்கோடு விளங்குவது குறிப்பிடத்தக்கது.

துரத்திப்பிடிக்க நினைக்கும் தூத்துக்குடி:

கனிமொழி முதல்முறையாகப் போட்டியிடும் தேர்தல் என்பதால், தூத்துக்குடி கவனம் பெற்ற தொகுதியாக உள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்க 48 மணி நேரம் உள்ள நிலையில்,  தூத்துக்குடியில் உள்ள கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறை நடத்தியுள்ள சோதனை, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோதிமணி

கரூரும் கலெக்டரும்

கரூர் ரவுண்டான பகுதியில், தி.மு.க-வினர்  இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து கரூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி உள்ளிட்டோர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். துணை சபாநாயகர் தம்பித்துரையின் வெற்றி, அ.தி.மு.க-வுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், தருமபுரி, ஆண்டிபட்டி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் ரத்தாவதற்கான சூழலே தற்போது நிலவுகிறது. தேர்தல் ரத்து செய்வது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழகத் தேர்தல் ஆணையரிடம் முழுமையான தகவல்களைக் கேட்டு வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.