ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து


பணப்பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. #JetAirwaysEmployees #JetAirwaysManagement

புதுடெல்லி:

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

 

இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. 

அவ்வகையில், நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. வங்கியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #JetAirwaysEmployees #JetAirwaysManagement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.