மோட்டார் வாகன விற்பனையில் 19 ஆண்டுகள் காணாத பின்னடைவு

மோட்டார் வாகன விற்பனையில் 19 ஆண்டுகள் காணாத பின்னடைவு

மோட்டார் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 19- ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்தூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய சந்தைகளில் கடந்த சில மாதங்களாகவே மோட்டார் வாகன விற்பனையில் மந்த நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, ஜூலை மாதத்தில் மோட்டார் வாகன விற்பனையானது 18.71 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இது, கடந்த 19-ஆண்டுகளில் காணப்படாத சரிவு நிலையாகும்.
மோட்டார் வாகன துறையில் காணப்படும் மந்த நிலை காரணமாக, கடந்த இரண்டு-மூன்று மாதங்களில் மட்டும் 15,000 பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சென்ற ஜூலையில், பயணிகள் வாகனம், இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மோட்டார் வாகன விற்பனையும் 18,25,148-ஆக சரிந்துள்ளது. அதேசமயம் 2018 ஜூலையில் இந்த விற்பனை 22,45,223-ஆக காணப்பட்டது.
இதற்கு முன்பாக, கடந்த 2000-ஆம் ஆண்டு டிசம்பரில்தான் மோட்டார் வாகன விற்பனையானது 21.81 சதவீத அளவுக்கு குறைந்தது. அதன்பிறகு, தற்போது ஜூலையில்தான் வாகன விற்பனை இந்த அளவுக்கு சரிந்துள்ளது. 
சென்ற ஜூலையில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 30.98 சதவீதம் குறைந்து 2,00,790-ஆக இருந்தது. கடந்தாண்டு ஜூலையில் இது 2,90,931-ஆக காணப்பட்டது. பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து 9 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இதைத்தவிர, இருசக்கர வாகன விற்பனை 16.82 சதவீதம் குறைந்து 15,11,692-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 25.71 சதவீதம் சரிந்து 56,866-ஆகவும் இருந்தது.
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் இந்த துறை புத்துயிர் பெறுவதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டியது எவ்வளவு கட்டாயம் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. உண்மையில் மத்திய அரசின் ஆதரவு தேவைப்படும் நேரமிது.
விற்பனை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தவும், தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டங்கள் மிக அவசியம் என்றார் அவர்.
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.