‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ – ‘பிகில்’ சர்ப்ரைஸ்

‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ – ‘பிகில்’ சர்ப்ரைஸ்

'தெறி’,‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’.ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  ‘‘ஆஸ்கார் நாயகன்’’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப் (Jackie Shroff) உள்பட பலர் நடித்து வருகின்றனர். 

அட்லீயுடன் விஜய் கைகோர்த்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்தப் புதிய படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சில மாதங்கள் முன் பிகில் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. அதன் பின்னர் ‘சிங்கப்பெண்ணே’ பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடி இருக்கிறார் என்ற தகவலும் வந்தது. மேலும் இதுதான் இந்தப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் என்றும் இந்தப்பாடலின் பெயர் வெறித்தனம் என்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். 
 

படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதால் படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறது.இந்நிலையில் படத்தில் விஜய் சம்பந்தபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததால் இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய 400 நபர்களுக்கு பிகில் எனப் பொறிக்கப்பட்ட  தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார் விஜய். இது மட்டுமல்லாமல் படத்தில் தன்னுடன் கால்பந்து வீரர்களாக நடித்த நடிகர்களுக்கு தன் கைப்பட ஆட்டோகிராஃப் போட்ட கால்பந்தையும் பரிசாகவும் விஜய் வழங்கியுள்ளார். விஜய் வழங்கிய மோதிரத்தை சில நடிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் நேற்று தளபதி தங்க மோதிரம் வழங்கியதன் மூலம் அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பை மேலும் சிறப்பனதாக மாற்றியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இறுதியாக படத்திற்கான அப்டேட்டுகளை வெளியிடுவதற்கான தருணம் வந்து விட்டது என்றும் பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியது என்றும்  95 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் தாமதமானதிற்கு மன்னியுங்கள் என்றும், உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்ய இன்னும் கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது விஜய் வழங்கிய இந்தத் தங்க மோதிரம் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.