ஆற்றுக்குள் குதித்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அதிசயம்  

ஆற்றுக்குள் குதித்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அதிசயம்  

கர்நாடகாவில் ஆற்றுக்குள் குதித்த பூசாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு பின் உயிரோடு வீடு திரும்பியுள்ளார்.

கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரமாக பெய்து வருகிறது. வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. கர்நாடகத்தின் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி அணைகள் நிரம்பி ஆர்ப்பரிக்கின்றன.

இந்நிலையில் ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுக்குள் குதித்து சாகசம் செய்த பூசாரி ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின் உயிரோடு வீடு திரும்பியுள்ளார். வெங்கடேஷ் என்ற 60 வயதான நபர் கபிலா ஆற்றுக்குள் குதித்துள்ளார். ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுக்குள் குதித்த வெங்கடேஷை பலரும் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வெள்ள நீரின் வேகத்தில் நிச்சயம் வெங்கடேஷ் உயிரிழந்திருப்பார் என பலரும் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் வீடு வந்து சேர்ந்துள்ளார். 

வீடு வந்த வெங்கடேஷ், வெள்ள நீரில் குதித்ததில் தான் சோர்ந்துவிட்டதாகவும், அதனால் ஹெஜ்ஜிஜ் பாலத்தின் கீழ் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தேன் என்றும் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, வெங்கடேஷ் வீடு திரும்பி விட்டதாக அவரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். ஆனால் இரண்டு நாட்கள் சாப்பாடு இல்லாமல் அவர் எப்படி எங்கு இருந்தார் என்பது குறித்து விவரம் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஆச்சரியப்பட்டாலும், வெங்கடேஷின் செயல் அவரின் சகோதரி மஞ்சுளாவை ஆச்சரியப்படுத்தவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மஞ்சுளா, இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் ஆற்றுக்குள் குதித்து மீண்டும் வீடு வருவதை 25 வருடங்களாக செய்து வருகிறார். அவர் திரும்பி வருவார் என எனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.