“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?” – ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்

“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?” – ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்

காவல்துறையினரை பொது இடத்தில் ஒருமையில் பேச காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எந்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என, காவல் ஆய்வாளர் சண்முகையா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் சண்முகையாவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசிய விவகாரம் பெரு‌ம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளிக்க ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில்‌, காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம், காவல் ஆய்வாளர் சண்முகையா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 8 தகவல்களைக் கேட்டு மனு அளித்துள்ளார். அதில், அத்திவரதர் தரிசனத்தி‌ல் பொது தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பிரிக்கப்படுவது எந்தச் சட்டத்தின் கீழ் வருகிறது ? விஐபி மற்றும் விவிஐபி தரிசன பிரிவுகளில் யார் யார் அனுமதிக்கத்தக்கவர்கள் ? அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டு‌ம் ? என்று கேட்டுள்ளார்.

அத்திவரதர் வைபவத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 13 வரை விஐபி, விவிஐபி என்ற பிரிவுகளில் தரிசனம் செய்தவர்களின் விவரங்களைத் தருமாறும், விவிஐபி என்ற பிரிவில் சென்ற வரிச்சூர் செல்வத்துக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எந்த அடிப்படையில் விவிஐபி பாஸ் கொடுத்துள்ளார்? என்றும் சண்முகையா கேட்டுள்ளார்.

பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினரை பொதுஇடத்தில் ஒருமையில் பேச எந்தச் சட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?, காஞ்சிபுரம் ஆட்சியர் தன் கீழ்நிலையில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்களை ஒருமையில் பேச முடியுமா என்ற தகவல்களை அளிக்குமாறு விண்ணப்‌பத்தில் அவர் கேட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.