பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு அளிப்பு; பக்தர்கள் பரவசம்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு அளிப்பு; பக்தர்கள் பரவசம்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு(ஜி.ஐ) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தத்தை பழனியில் மட்டுமே தயாரித்து விற்க முடியும். மற்ற ஊர்களில் அந்தப் பெயரில் தயாரிக்க அனுமதி கிடையாது.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொருட்கள் பிரபலமாக இருக்கும். அதே பொருட்களை வேறொரு ஊரில் தயாரித்தால், அது ஒரிஜனலாக இருக்காது. திருநெல்வேலி அல்வாவை உலகின் எந்த மூலையில் தயாரித்தாலும் அது தாமிரபரணி தண்ணீரில் தயாரித்த அல்வாவைப் போல் இருக்காது. அந்த வகையில், பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரபலமானது.

இப்படி பிரபலமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்பட்டால், அதன்பிறகு அதே பெயரில் வேறொரு இடத்தில் அந்த பொருளை தயாரிக்கக் கூடாது என்பது சட்டம். தற்போது பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர், பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு அளிக்கக் கோரி, புவிசார் குறீயீட்டு அமைப்புக்கு விண்ணப்பித்தார். இதை ஏற்று பழனி பஞ்சாமிர்தத்திறகு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் துணைப் பதிவாளர் சின்னராஜ் நாயுடு தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான சான்றிதழ் ஜி.ஐ. அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாழைப்பழம், கற்கண்டு, தேன், வெல்லம், பேரீச்சம்பழம் போன்றவை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் தர ஆய்வுக்கு உட்பட்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.