பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னையில் அம்மா ரோந்து வாகனம் விரைவில் அறிமுகம்

சென்னை, ஆக. 14–

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனம் சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி தலைமையில் அண்மையில் அமைக்கப்பட்டது. இதன் ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ரவி செயல்படுகிறார். இதற்கு மாவட்டம்தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கென பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் தொலைபேசி எண் 1098 மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1091, வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னையில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பணியில் உள்ள சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி இதைத் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிகிறது.

இந்தத் திட்டம், விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.