விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் எப்-16 ரக விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. இவற்றை இந்திய விமானப்படையின் விங் கமாண்டோ குழுவினர் விரட்டிச் சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானும் ஒருவராக இருந்தார். இவர் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தி அசத்தினார். அப்போது அவர் சென்ற மிக்-21 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது. ராணுவ வரலாற்றில் எப்-16 விமானத்தை மிக்-21 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில் அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை இந்தியா மேற்கொண்டது. இதன் காரணமாக 60 மணி நேரத்திற்கு பின் அபிநந்தன் பத்திரமாக இந்தியா திரும்பினார்.
இதையடுத்து பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். இதன்பிறகு அபிநந்தன் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். எதிரி நாட்டு வீரர்கள் கேட்ட ராணுவ ரகசிய கேள்விகளுக்கு ‘பதில் அளிக்க முடியாது’ என்று கூறியது மக்களை பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில்,  அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி அவருக்கு டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் 5 பைலட்டுகளுக்கு வாயு சேனா விருது வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.