ஆஷஸ் தொடர்: இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது

ஆஷஸ் தொடர்: இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான வரலாற்று புகழ்பெற்ற ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் லண்டனில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய ஆஷஸ் தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் சமனில் முடிந்தது.
கடந்த மாதம் 26ஆம் தேதி முடிந்த மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில்,  4ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் ஆஸி. டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றும். இங்கிலாந்து வென்றால் சமனில் ஆஷஸ் நிறைவு பெறும்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்திக்கவில்லை.
டிம் பெயின் தலைமையிலான ஆஸி அணியும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வலுவான நிலையில் உள்ளதால், கடைசி ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியில் இருந்து ஜேசன் ராய், கிரெய்க் ஓவர்டன் ஆகியோர் கடைசி டெஸ்ட் ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இடத்துக்கு ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் பந்துவீச மாட்டார் என்று தெரிகிறது. எனினும், அணியில் இடம்பெற்றுள்ள அவர் பேட்டிங்கை மட்டும் கவனிப்பார் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு, ஆல்-ரவுண்டர் மிச்செல் மார்ஷ்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் (2017-18) மார்ஷ், இரு சதங்களைப் பதிவு செய்திருந்தார்.
இந்தத் தொடரை பொறுத்தவரையில் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 4ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் பதிவு செய்து அதிரடி காட்டினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், தனது வேகத்தால் ஆஸி. வீரர்களை மிரட்டி வருகிறார்.
எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இங்கிலாந்து
ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், 
ஜானி பேர்ஸ்டவ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், 
ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஜோ டென்லி, ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

ஆஸ்திரேலியா
டிம் பெயின் (கேப்டன், விக்கெட் கீப்பர்), 
டேவிட் வார்னர், 
மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் மார்ஷ், மாத்யூ வேட், பட் கம்மின்ஸ், பீட்டர் சிட்டில், மிச்செல் ஸ்டார்க், நாதன் லயன், 
ஜோஷ் ஹஸல்வுட்.
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.