"உலகுக்கே நாகரிகத்தையும், அன்பையும் போதித்தது பாரதம்': இல.கணேசன்

"உலகுக்கே நாகரிகத்தையும், அன்பையும் போதித்தது பாரதம்': இல.கணேசன்

உலகுக்கே நாகரிகத்தையும் அன்பையும் கற்றுக்கொடுத்தது பாரதம் என்று மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்  பேசினார்.
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 125-ஆவது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பக்திப் பாடல்களை நாசர் இப்ராஹிம் பாடினார். 
நிகழ்ச்சிக்கு சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். இதில் சுவாமி விவேகானந்தர் குறித்து மகாகவி பாரதியார் கூறியவை நூலின் நான்காவது பாகத்தை  இல.கணேசன் வெளியிட்டு சிறப்புரையாற்றியது: 
 உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை மருத்துவர், வானவியல் சாஸ்திர நிபுணர் உள்பட பல்வேறு துறைகளில் பாரதம் பண்டைய காலத்திலேயே சிறப்பு பெற்று விளங்கியது. கிரகங்கள் கோள்களை கணித்து வருடம், மாதம், வாரம் என்ற கணக்கீடுகளை உருவாக்கியதும் பாரதத்தின் புதல்வர்கள் தான். இந்தியாவில் ஏராளமான துறவிகள் இருந்தாலும் தனிச்சிறப்பு பெற்ற துறவியாக விளங்குபவர் சுவாமி விவேகானந்தர். உலகிலேயே வீரத்துறவி என்ற பெயர் சுவாமி விவேகானந்தருக்கு மட்டும்தான் உண்டு.
 பாரதத்தின் மீதும், அதன் விடுதலை மீதும் தீராத பற்று கொண்டவர் சுவாமி விவேகானந்தர்.
 சிகாகோ உரையின் மூலம் பாரதத்தின் பெருமையை உலகம் உணரச் செய்தவர். எனவே இன்றைய  இளைய தலைமுறையினர் சுவாமி விவேகானந்தரை முன்மாதிரியாகக் கொண்டு பாரதம் பற்றிய உரைகளை படித்து தெரிந்து கொண்டு, தாங்களும் முன்னேறுவதோடு பாரதத்தையும் முன்னேற்ற வேண்டும்  என்றார்.
சுவாமி கமலாத்மானந்தர்: பாரதம் ஆன்மிக பூமி என்று சுவாமி விவேகானந்தர் அன்றே அறிவித்தார். உலகில் மதவெறி என்ற அநாகரிகம் இருக்கக்கூடாது. மதநல்லிணக்கம் இல்லாவிட்டால் நாட்டின் வளர்ச்சி,முன்னேற்றம் பாதிக்கப்படும். ஆண், பெண், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்பது முக்கியமில்லை. யாராக இருந்தாலும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். உண்மையான ஆன்மிகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியர்களை பாரதத்தின் பெருமையை உணரச்செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றார்.
நிகழ்ச்சியில் சுவாமி தத்பிரவானந்தர், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலாயா சுவாமி ஹரிவ்ரதானந்தர் ஆகியோரும் பேசினர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.