தோட்டம் அமைக்கலாம்  வாங்க…: செடிகளை பாதுகாக்கும் தேமோர் கரைசல்

தோட்டம் அமைக்கலாம் வாங்க…: செடிகளை பாதுகாக்கும் தேமோர் கரைசல்

 

நாம் வளர்க்கும் செடிகள் செழிப்பாகவும், சுவையான மற்றும் சத்தான காய்களை அவற்றிலிருந்து பெறவும் சிலவகையான இயற்கை வளர்ச்சியூக்கிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்:

காய்கள் சுவையானதாகவும், சத்தானதாகவும் இருப்பதோடு பளபளப்பாகவும், நல்ல கணிசமான வளர்ச்சியுடனும் இருக்க உதவும் கரைசல் தேமோர் கரைசல். எளிதாக வீட்டிலேயே தயாரித்து இதனை பயன்படுத்த செடிகள் சிறந்த வளர்ச்சி பெறுவதோடு, பூக்களும் உதிராமல் நல்ல முறையில் காய்பிடித்து வளரும். மேலும் பூச்சிகள், நோய்தாக்குதலில் இருந்தும் நமது செடிகளை பாதுகாக்கலாம். இதனை தயாரிக்க தேங்காயும் புளித்த மோரும் தேவை. 

தேங்காயின் “தே’ வையும் மோரின் “மோர்’ ரையும் சேர்க்க தேமோர் கரைசல். சமபங்கு தேங்காய்ப்பாலையும் (தேங்காயை நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக்கொள்ளவேண்டும்) மோரையும் சேர்த்து ஒருவாரம் நன்கு மூடி நிழலில் வைக்க, தேமோர் கரைசல் தயார். தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். இதனை ஒரு பங்கிற்கு பத்து பங்கு நீர்சேர்த்து செடிகளின் மீது படுமாறு தெளிக்க செடிகள் நன்கு வளர்ச்சிபெறும். தேவையான அளவு மட்டும் தயாரித்து உடனுக்குடன் பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும்.

அதேபோன்று செடிகளுக்கு மற்றமொரு சிறந்த வளர்ச்சி ஊக்கி மீன் அமிலம். செடிகளுக்கு தேவையான தழைச் சத்தினை அள்ளித் தரும் அட்டகாசமான ஒரு வளர்ச்சியூக்கி. மீனிலிருந்து கிடைக்கக்கூடிய கழிவுகள் (செதில்கள், குடல், வால் பகுதி, தலைப்பகுதி போன்ற பயனற்ற பகுதிகளை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் சமபங்கு வெல்லத்தினை நன்கு கலந்து ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் மூடிவைக்க வேண்டும்.

ஒருமாதத்திற்குள் நல்ல தேன் பழ வாசனை இதிலிருந்து வர மீன் அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்குப் பின் இதனை திறந்து பின் வடிகட்டி  ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் இந்த மீன் அமிலத்தை கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். பச்சைபசேலென்று செடிகள் தளதளவென்று செழிப்பாக வளரும். காய்கள் செழிப்பாக இருக்கும். சிறந்த வளர்ச்சியூக்கி.

செடிகளுக்கு தேவையான பல ஊட்டச் சத்துக்கள் கிடைக்க,  தேநீர் கழிவுகள், வாழைப்பழத்தோல் மற்றும் முட்டை  ஓடுகளை ஒன்றாக கலந்து நன்றாக நீர்சேர்த்து மைய அரைத்துக்கொண்டு அவற்றை ஒரு நாள் புளிக்கவைக்க வேண்டும். பின் அதனை மறுநாள் வடிகட்டி அதனுடன் பத்துப்பங்கு நீர் சேர்த்து செடிகளுக்கு தெளிக்க பல ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு  கிடைக்கும், செடிகள் நன்கு வளரும். இந்த த்ரீ இன் ஒன் கரைசலால் செடிகள் செழிப்பாக ஊட்டச்சத்துக்கள் குறைபாடின்றி வளரும். எளிமையாக வீட்டில் தயாரிக்கக் கூடியது.

 

செடிகளுக்கு மற்றுமொரு சிறந்த வளர்ச்சியூக்கி அமிர்தக்கரைசல், இதனை தயாரிக்க நாட்டுமாட்டின் புது சாணம் ஒரு கிலோவும், கோமியம் ஒரு லிட்டரும் அதனுடன் இருபத்தி ஐந்து கிராம் வெல்லமும் தேவை. இவை மூன்றையும் ஒன்றாக கலந்து இருபத்தி நான்கு மணிநேரம் நன்கு கலக்கி வைக்கவேண்டும், பின் அதனை ஒரு பங்கிற்கு பத்து பங்கு நீர்சேர்த்து செடிகளுக்கு தெளிக்கலாம். தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

பஞ்சகவ்யா என்பது பசுவினுடைய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிறந்த வளர்ச்சியூக்கி மற்றும் மண்ணை வளமாக்கும் உரம். எளிமையாக வீட்டிலேயே பசுஞ்சாணம் ஐந்து கிலோ, பசுவின் கோமியம் மூன்று லிட்டர், பசும்பால் இரண்டு லிட்டர், புளித்த தயிர் இரண்டு லிட்டர், பசு நெய் அரை லிட்டர், கரும்புச்சாறு அல்லது வெல்லக்கரைசல் ஒரு லிட்டர், இளநீர் ஒரு லிட்டர், வாழைப்பழம் 12 பழம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 21 நாட்கள் அன்றாடம் காலையும் மாலையும் நன்கு கலந்து விட தயாராகும். இதனை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்த ஒரு லிட்டர் நீருடன் முப்பது மில்லி பஞ்சகவ்யாவை நன்கு கலக்கி செடிகளின் மீது தெளிக்கலாம்.

செடிகளுக்கு சீரான வளர்ச்சியையும் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கும் அக்னி ஹோத்ரா சாம்பல் கரைசல். இதனை தயார் செய்ய 200கிராம் அக்னி ஹோத்ரா சாம்பலை ஒரு லிட்டர் கோமூத்திரத்தில் பதினைந்து நாட்கள் ஊறவைத்து பின் அதனை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் மூன்று முறை செடிகளுக்கு தெளிக்க செடிகள் பாதுகாக்கப்படும், செழிப்பான வளர்ச்சியையும் காணலாம். 

இவ்வாறான வளர்ச்சி ஊக்கிகள், கரைசல்கள் மூலம் செழிப்பான, ஆரோக்கியத்தை அளிக்கும்   இயற்கை காய்கனி கீரைகளை நாமே நமது வீட்டில் பெறலாம். ஒவ்வொரு குடும்பமும் இவ்வாறான தோட்டத்தினை அமைக்க ஆரோக்கியமான அடுத்த சமூகம் உருவாகும். 

ஒவ்வொரு முறையும் காய்ப்பு முடிந்தபின் மண்ணை நன்கு வெயிலில் பிரட்டிபோட்டு ஒருவாரம் காயவிட வேண்டும். பின் அவற்றில் பஞ்சகவ்யா போன்ற சிறந்த நுண்ணுயிர் ஊக்கியை தெளித்து அதனுடன் மக்கும் குப்பைகள், மண்புழு உரம் ஆகியவற்றை சேர்த்து ஈரத்துணியில் போர்த்திவிட சிறந்த செழிப்பான மண் மீண்டும் நமக்கு கிடைக்கும். இதனை மீண்டும் மறுமுறை தொட்டிகளில் நிரப்பி விதைத்து செடிகளை செழிப்பாக பெறலாம். 

(நிறைவு)


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.