மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்

மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, முஸ்லிம்கள் ஒருவர் கூட வசிக்காத கிராமத்தில், மொகரம் பண்டிகையை, ஹிந்துக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதுார் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து, அந்த ஊரில் உள்ள ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இங்கு ஒரு, முஸ்லிம் குடும்பமோ, ஒரு முஸ்லிமோ வசிக்கவில்லை.ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று, இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு முன் விரதம் இருந்து, அல்லா சாமி என்றழைக்கப்படும், ‘உள்ளங்கை’ உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு தினமும் பூஜை செய்து வழிபடுவர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது. உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக, நேற்று அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர்.நேற்று காலை, அல்லா கோவில் முன், தீ மிதி விழா நடந்தது.

ஏராளமானோர், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டி, தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர். இதுபோல், கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்திலும், மொகரம் விழா நடந்தது. நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.