அழியும் நிலையில் உள்ள முதுமக்கள் தாழிகளை பாதுகாக்கக் கோரிக்கை

அழியும் நிலையில் உள்ள முதுமக்கள் தாழிகளை பாதுகாக்கக் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை அருகே அழிந்து வரும் நிலையில் உள்ள முதுமக்கள் தாழிகளை மீட்டு, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமப் பகுதியில் மண்பாண்ட ஓடுகளுடன் காணப்பட்ட தடயங்கள் குறித்து அந்தப் பகுதியினர் அளித்த தகவலின்பேரில், விழுப்புரம் தொல்லியல் ஆர்வலர் கோ.செங்குட்டுவன் தலைமையில், சரவணக்குமார், விஷ்ணு உள்ளிட்ட குழுவினர் அங்கு கள ஆய்வு செய்தனர். அப்போது, அந்தப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த முதுமக்கள் தாழிகள் அழிவின் விளிம்பில் மறைந்து வருவது தெரியவந்தது.
இதுபற்றி கோ.செங்குட்டுவன் கூறியதாவது: பரிக்கல் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்துக்கு உள்பட்ட நத்தம் பகுதியில் உள்ள பரிக்கல் ஏரி கலிங்கலில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் உள்ளன.
இந்த ஏரி கலிங்கலுக்கு எதிரில் தனியார் வீட்டுமனைப் பகுதிகளிலும் முதுமக்கள் தாழிகள் இருக்கின்றன. 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தத் தாழிகள் அனைத்தும் அழிவின் விளிம்பில் மறைந்து வருகின்றன. பழங்காலத்தில்  இந்தப் பகுதியில் நிறைய தாழிகள் இருந்திருக்க வேண்டும். அவற்றின் உடைந்த பாகங்கள் மற்றும் பானை ஓடுகள் நத்தம் பகுதி முழுவதும் காணப்படுகின்றன.
முந்தைய காலங்களில் வயது முதிர்ந்து உயிர் துறப்பவர்களை இது போன்ற தாழியில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. இந்த முதுமக்கள் தாழிகள், தமிழர் வரலாற்றின் அடையாளங்களாக உள்ளதால், இவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் பகுதியிலும் இதுபோன்ற தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, இந்தப் பகுதிகளில் அகழாய்வு நடத்தி, முதுமக்கள் தாழிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கும், தமிழக அரசின் தொல்லியல் ஆணையர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் வியாழக்கிழமை மனு அனுப்பியுள்ளோம் என்றார் அவர்.
நடுகல் கண்டெடுப்பு: இதேபோல, பரிக்கல் கிராம நத்தம் பகுதியில் இந்தக் குழுவினரின் கள ஆய்வின் போது, விவசாய நிலத்தில் இருந்த நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டது. நான்கரை அடி உயரத்தில் இருக்கும் இந்த நடுகல்லில் மூன்று கட்டங்களாக அடுக்கு நிலைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கீழிருந்து மேலாக, முதல் கட்டத்தில் குதிரை மீது அமர்ந்த வீரனை தேவ மகளிர் அழைத்துச் செல்லும் காட்சியும், இரண்டாவது கட்டத்தில் அமர்ந்த நிலையில் உருவம் ஒன்றும், மூன்றாவது கட்டத்தில் பெண் ஒருவர் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. 
இது நடுகல் வகையைச் சேர்ந்தது என்றும், இதன் காலம் 16 – 17ஆம் நூற்றாண்டாகக் கருதலாம் என்றும் கல்வெட்டு ஆய்வாளர் கோவை துரை.சுந்தரம் தெரிவித்தார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.