மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 2,200 கோடி டாலரை எட்டும்

மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 2,200 கோடி டாலரை எட்டும்

இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 2,200 கோடி டாலரை (சுமார் ரூ.1.56 லட்சம் கோடி) எட்டும் என மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (பார்மெக்ஸில்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைமை இயக்குநர் உதய் பாஸ்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: அமெரிக்க சந்தை மந்த நிலையிலிருந்து மீண்டு வருவது இந்தியப் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சீன அரசும், இந்திய மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சில கொள்கை முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், கடந்த நிதியாண்டில் 1,914 கோடி டாலராக இருந்த மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் 2,200 கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மருந்து பொருள்களின் ஏற்றுமதி 21.7 சதவீத வளர்ச்சியை கண்டு 172 கோடி டாலராக இருந்தது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான கால அளவில் இந்த ஏற்றுமதி 617 கோடி டாலராக காணப்பட்டது. இந்த காலகட்டத்தில் மட்டும் இந்திய ஏற்றுமதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 13 சதவீதமாக இருந்தது.
நடப்பாண்டு ஜூன் நிலவரப்படி, சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஜெனரிக் மருந்துகள் ஏற்றுமதியானது 2.7 முதல் 2.8 மடங்கு  அதிகரித்துள்ளது.
அமெரிக்க சந்தையைப் பொருத்தவரையில் தற்போதைய நிலையில் மருந்துகள் விலையானது ஸ்திரத்தன்மை அடைந்து வருகிறது. 
அதன்காரணமாகவே, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 8 சதவீத பின்னடைவைக் கண்டிருந்த இந்த சந்தை கடந்த நிதியாண்டில் 13.72 சதவீத வளர்ச்சியைப் பெற்று மந்த நிலையிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. 
பார்மெக்ஸில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மருந்து கட்டுப்பாட்டாளர் மாநாடு செப்டம்பர் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், 25 நாடுகளைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் அவர்.
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.