காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக சுயபரிசோதனை அவசியம்-ஜோதிராதித்ய சிந்தியா…

காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக சுயபரிசோதனை அவசியம்-ஜோதிராதித்ய சிந்தியா…

காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசர அவசிய தேவை ஏற்பட்டுள்ளதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த அக்கட்சியின் இளம் தலைவர் கூறியுள்ளார்

மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகியதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முன்னனி பிரமுகர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக, சிவசேனா கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை கைவிட்டு சென்றிருக்கக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் கூறினார். தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டிய நேரத்தில், கட்சித் தலைவர் விலகிச் சென்றதுதான் மிகப்பெரிய பிரச்சனை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், சோனியா காந்தியாலும் அதை இட்டு நிரப்ப முடியவில்லை எனவும் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கட்சி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசர அவசிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும், கட்சி தற்போதுள்ள நிலையை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டியதே உடனடி தேவை என்றும் தெரிவித்தார்.

காங்கிரசில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக குர்ஷித் கூறியிருப்பது பற்றி கேட்டபோது, மற்றவர்கள் கூறியது பற்றி தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். ராகுல்காந்திக்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் சிந்தியா, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படாவிட்டால் பாஜகவில் இணைந்து விடுவார் என கடந்த 2 மாதங்களாகவே ஊகத் தகவல்கள் உலா வந்தன. மத்திய அரசு 370ஆவது பிரிவு ரத்து செய்ததை ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.