கேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை சம்பவம் – ஜூலியை காண குவிந்த மக்கள்

கேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை சம்பவம் – ஜூலியை காண குவிந்த மக்கள்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. ஜூலியின் குடும்பத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஜூலியின் மாமியார் அன்னம்மாவில்(2002) தொடங்கிய இந்த மர்ம மரணம், மாமனார் டாம் தாமஸ்(2008), கணவர் ராய் தாமஸ்(2011), அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ(2014) என தொடர்ந்தது. ஜூலி மாமனாரின் அண்ணன் மகன் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தை 2016இல் உயிரிழந்தனர்.

தொடர்ச்சியான இந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புகளுக்கு இடையே, 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டனர். அப்போதுதான், டாம் தாமஸின் இளைய மகனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய ஜூலி திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொலைகள் அனைத்தும் சொத்துக்காகவும் தான் விரும்பிய சாஜூவை திருமணம் செய்வதற்காகவும் ஜூலி நிகழ்த்தியுள்ளார். மட்டன்சூப்பில் சயனைடு கலந்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளார்.

இந்த சீரியல் கொலை தொடர்பாக ஜூலியை கைது செய்து, கேரள சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுமிகளை கொலை செய்ய முயற்சித்ததாகவும் உறவினர்கள் புகார்கள் கூறியுள்ளனர். ஜூலிக்கு சயனைடு கொடுத்ததாக மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜூலியை தாமரசேரி நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மட்டன்சூப் சீரியல் கொலை சம்பவம் கேரளாவையே உலுக்கியது. நீதிமன்றத்தில் ஜூலியை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த வழக்கில் ஜூலி உள்ளிட்ட மூவருக்கு 7 நாட்கள் (அக்டோபர் 16 வரை) போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.