சிவகாசி பட்டாசு தொழிலில் ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு

சிவகாசி பட்டாசு தொழிலில் ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள நாட்டின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. சிவகாசியில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், எனவே அதன் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கும், வெடிப்பதற்கும் பல கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.இதன் காரணமாக பட்டாசு தொழில் நலிவடைந்தது. நீதிமன்ற கட்டுப்பாட்டை தளர்த்தக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில ஈடுபட்டன. இதனால் பட்டாசு உற்பத்தி முழுமையாக முடங்கின. லட்சக்கணக்கானோர் வேலையின்றி மாற்று வேலைக்கு சென்றனர்.

பின்னர் 3 மாத வேலை நிறுத்தத்துக்கு பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டது.இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் மூலப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு கடந்த 2 மாதமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வந்தன. கடந்த வாரம் மத்திய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஹர்சவர்தன் பசுமை பட்டாசை அறிமுகம் செய்து வைத்து இதனை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

நாடு முழுதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசு தயாரிக்க 28 ஆலைகளுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 28 ஆலைகள் எப்படி நாட்டின் முழு பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பசுமை பட்டாசை தயாரிக்க 300 ஆலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சிவகாசியில் வழக்கமாக ஆலைகளில் 300 ரகங்களுக்கு மேல் பட்டாசுகள் தயாரிக்கப்படும். ஆனால் பசுமை பட்டாசு உற்பத்தியால் குறைந்த ரகங்களே தயாரிக்கப்படுகிறது.
மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்கான உரிய வழிமுறைகளும் தெரிவிக்கப்படவில்லை. அதுதொடர்பான புரிதலும் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் மூலப்பொருள் முக்கியமானதாகும். அது இல்லாமல் பட்டாசை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. தற்போது மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்யப்பட்டுள்ள பட்டாசு பெட்டியில் கியூ ஆர் கோடு, முத்திரையிடப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் பண்டிகையையொட்டி 75 சதவீத பட்டாசுகள் வியாபாரத்துக்கு அனுப்பப்பட்டு விட்டன. தற்போது இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பின் பட்டாசு உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படும். பசுமை பட்டாசு உற்பத்தி சிக்கல், ஆட்கள் பற்றாக்குறை, விதிகளை முறைப்படுத்துவதில் குறைபாடு என பல்வேறு பிரச்சினைகளால் சிவகாசியில் பட்டாசு உரிமையாளர்களுக்கு ரூ. 1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.