மயங்க் அகர்வால் அபார சதம்: முதல் நாளில் தனது பலத்தை மீண்டும் நிரூபித்த இந்திய அணி!

மயங்க் அகர்வால் அபார சதம்: முதல் நாளில் தனது பலத்தை மீண்டும் நிரூபித்த இந்திய அணி!

 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாளன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் இன்று முதல் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த டெஸ்டில் இரு சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா இன்று 14 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு மயங்க் அகர்வாலும் புஜாராவும் கவனமாக விளையாடி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நன்குச் சமாளித்தார்கள். 15.1 ஓவர்களில் இந்திய அணிக்கு 50 ரன்கள் கிடைத்தன. முதல் ரன்னை எடுக்க புஜாராவுக்கு 13 பந்துகள் தேவைப்பட்டன. மயங்க் அகர்வால் பவுண்டரிகளாக அடித்து தனது ரன்களை உயர்த்தினார்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 34, புஜாரா 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல அவரவர் பாணியில் மயங்க் அகர்வாலும் புஜாராவும் விளையாடினார்கள். 112 பந்துகளில் மயங்க் அகர்வாலும் 107 பந்துகளில் புஜாராவும் அரை சதங்களை எட்டினார்கள். ஆனால், அரை சதமெடுத்த அடுத்த ஓவரிலேயே 58 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் புஜாரா. 

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 53 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 86 ரன்களுடனும் கோலி ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு மஹாராஜ் வீசிய 56-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்தார் மயங்க் அகர்வால். அடுத்ததாக, 183 பந்துகளில் தனது 2-வது சதத்தைப் பதிவு செய்தார்.

முந்தைய டெஸ்டில் நிலைத்து நின்று விளையாடி இரட்டைச் சதமெடுத்த மயங்க் அகர்வால், இந்தமுறை 108 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே களமிறங்கினார். முதல் டெஸ்டை விடவும் இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு நன்றாக இருந்ததால் கோலியும் ரஹானேவும் கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 17-வது பந்தில் தான் தனது முதல் ரன்னை எடுத்தார் ரஹானே. 

91 பந்துகளில் அரை சதமெடுத்தார் விராட் கோலி. கடந்த வருடம் டிசம்பரில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்தார் கோலி. அதன்பிறகு அவர் 5 டெஸ்டுகள் விளையாடியும் அடுத்தச் சதத்தை எடுக்கமுடியவில்லை. இதனால் இந்த டெஸ்டில் கோலி சதமெடுப்பார் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். வெளிச்சம் குறைவாக இருந்ததால் 85.1 ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

முதல் நாள் முடிவில் இந்திய அணி 85.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 63, ரஹானே 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.