`தினமும் 100 கி.மீ நடை.. இரு கன்டெய்னர் லாரியில் 300 பேர்!’ -தினக்கூலி தொழிலாளர்களின் அவல நிலை

`தினமும் 100 கி.மீ நடை.. இரு கன்டெய்னர் லாரியில் 300 பேர்!’ -தினக்கூலி தொழிலாளர்களின் அவல நிலை

கொரோனா வைரஸ் பரவல் வளர்ந்த உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஆரம்ப கட்டத்திலே பரவலைத் தடுக்காவிட்டால், எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துவிடும். உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா

Also Read: அதிக பாதிப்புக்கு உள்ளான நாடு… சீனாவை விஞ்சிய அமெரிக்கா! -அச்சத்தில் மக்கள் #Corona

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொடுவதற்கு முன்னதாகவே நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசியத் தேவைகள் அன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. மீறி சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் ஒத்துழைப்புடனே கொரோனாவை வெல்ல முடியும். அதனால் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட இந்த லாக்-டவுன் உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தியாவில் பெருபாலான மக்கள் தினசரி கூலி தொழிலுக்குச் செல்பவர்கள். அவர்கள் இந்த லாக்-டவுன் உத்தரவால் பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறார்கள்.

தொழிலாளர்கள்

பலரும் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு இடத்தில் பணியாற்றுவதால் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதும் பெரும் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மன்னா லால் என்ற ஒரு கட்டடத் தொழிலாளி கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 100 கிலோ மீட்டர் நடந்து கடந்துள்ளதாக ஹிந்துஸ்தான் ஊடகத்திடம் தெரிவித்தார். தனது கிராமத்துக்குச் செல்ல இன்னும் 150 கிலோ மீட்டர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் ரமேஷ் மீனா என்னும் தொழிலாளி கால் உடைந்த தனது மனைவியைத் தோளில் சுமந்த படி சொந்த ஊருக்கு நடைப்பயணம் மேற்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி மனதை ரணமாக்குகின்றன.

நாடு முழுவதும் பலர் இப்படி நடைப்பயணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்கிறார்கள். லாக்-டவுன் உத்தரவு காரணமாக அடுத்த 21 நாள்களுக்குப் பணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள். கையிலும் குறைவான பணமே இருப்பதால் பலரும் கிடைக்கும் இடத்தில் தண்ணீரைக் குடித்தபடி நடக்கிறார்கள். அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் இவர்களின் நிலை என்னமோ பெரும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

தொழிலாளர்கள்

சில பகுதிகளில் காவல்துறையினர் அவர்களுக்கு தண்ணீர், உணவு முதலிவற்றை அளிக்கிறார்கள். எனினும் அது போதுமானதாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இது ஒருபுறம் என்றால் மறுபுறம், தொழிலாளர்கள் பலர் பாதுகாப்பற்ற பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்திலிருந்து ராஜஸ்தானுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற இரண்டு கன்டெய்னர் லாரியில் சுமார் 300 தொழிலாளர்கள் இருந்ததை மகாராஷ்டிரா போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அவர்களிடம் விசாரித்தனர். தினக் கூலித் தொழிலாளர்களான அவர்கள், பணி செய்ய வந்த இடத்தில் இருக்க முடியாது என்பதால் சொந்த ஊரான ராஜஸ்தான் செல்வது தெரிய வந்தது.

கொரோனா வைரஸ்

உடல் ரீதியாக மக்கள் விலக இருக்க வேண்டிய சூழலில் இத்தனை நெருக்கமாக, அதுவும் 2 கன்டெய்னர் லாரியில் 300 நபர்கள் என்ற அளவில் பயணிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை யோசித்துப் பாருங்கள். லாரி ஓட்டுநர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், ஏழைத் தொழிலாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் போலீஸார் தவிக்கின்றனர். உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம் என மகாராஷ்டிரா போலீஸார் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் தங்கி தின கூலி பணி செய்து வந்த இளைஞர்கள் இருவர் பணம் இல்லாமல் கடந்த நான்கு நாள்களாக சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் பட்டினியில் இருந்துள்ளனர். இறுதியாக வேறு வழியின்றி நேற்று மாலை காவல்துறைக்கு போன் செய்து தங்களின் நிலையை எடுத்துக் கூறியுள்ளனர். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறை அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்ததுடன் அவர்களுக்குத் தேவையான மளிகை பொருள்களையும் அளித்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை மற்ற பகுதிகள் யாராவது இப்படி பசியுடன் இருக்கிரார்களா? அப்படி இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: `அமெரிக்க ராணுவ லேப்; வுகானுக்கு எடுத்துவந்த வீரர்!’ -அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சீனா #Corona

சமூக வலைதளங்களில் பலரும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வசிப்பவர்கள் சுத்தமான தண்ணீரை சாலை ஓரங்களில் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அனைத்து மாநில அரசுகள், தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலே பாதுகாப்பாக இருக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.