உதயம்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் …. பொறியியல் படிப்பில் உச்சம் தொடலாம்

உதயம்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் …. பொறியியல் படிப்பில் உச்சம் தொடலாம்

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் விரைவில் துவக்கப்பட உள்ளது. இது, புதுச்சேரியின்முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெறுகிறது.

புதுச்சேரி அடுத்த பிள்ளைச்சாவடியில் 280 ஏக்கர் பரப்பளவில் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த கல்லுாரி, ஆயிரக்கணக்கான சிறந்த மாணவர்களை உருவாக்கி, தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது.’ரூசா’ எனப்படும் ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் என்ற திட்டத்தின் கீழ், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லுாரிகள் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படுவதற்கு புதுச்சேரி பொறியியல் கல்லுாரியை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.பல்கலைக்கழகம் அமைக்கும் பணிக்காக, ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.28.75 கோடி வழங்கப்பட்டு விட்டது. இந்த தொகையை பயன்படுத்தி புதுச்சேரி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து விட்டார்.

இதைதொடர்ந்து, பல்கலைக்கழக கட்டமைப்பு, செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பை, புதுச்சேரி அரசிதழில் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பாட்டுக்கு வந்து விடும். முறைப்படியான திறப்பு விழாவிற்கு உயர்கல்வித் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.புதுச்சேரி பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும்போது, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

காலத்திற்கு தேவையான புதிய பொறியியல் படிப்புகளை உடனுக்குடன் ஆரம்பிக்க முடியும். மேலும், பாடத் திட்டங்களையும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமே தயாரித்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.பொறியியல் படிப்பு இடங்களின் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை போன்றவற்றையும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமே முடிவு செய்து கொள்ள முடியும். தற்போது, அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள் அனைத்தும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ளன.

இவை, எதிர்காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக் கழத்துடன் இணைய முடியும். காரைக்காலில் அமைந்துள்ள காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் காரைக்கால் மையமாக மாற்றப்பட உள்ளது. புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப பல்கலைக் கழகம் முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.