ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கண்ணீரை கண்டு உண்மையில் உலக நாடுகள் வியந்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விந்தையான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உலக தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அவர் கொடுக்கும் உத்தரவுகளும் அளிக்கும் தீர்ப்புகளும் மிகவும் கொடூரமனவையாகவும் வினோதமானவையாகவும் இருக்கும். இந்நிலையில், வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.  அப்போது வடகொரியா Hwasong-16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.  

அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில்;- எங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும் கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், நான் அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றவில்லை. இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த நாட்டை வழிநடத்திய எனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோருக்கு பின் நான் இந்த நாட்டை வழி நடத்தி வருகிறேன்.

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி எனது பணிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும் உங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று உருக்கமாக பேசியுள்ளார். அப்போது கிம் ஜாங் உன் கண் கலங்கி அழுதார். கிம்மின் உரையை கேட்டு அங்கிருந்த மக்கள் ராணுவ வீரர்கள் என பலரும் கண் கலங்கினர்.