உ.பி: தூங்கிக் கொண்டிருந்த 3 பட்டியலின சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு! – தொடரும் சாதிய கொடுமைகள்

சம்பவம் 1: 

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பின், அப்பெண்ணின் உடலை காவல்துறையினர் இரவோடு இரவாக தகனம் செய்த விவகாரம் பொது மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உ.பி. அரசின் செயல் மனித நேயமற்றது என்று பலர் குரல் எழுப்பி வரும் நிலையில், தற்போது உ.பி. கோண்டா மாவட்டத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் மீது அதிகாலை 2 மணிக்கு ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்

உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து 117 கி.மீ. தூரத்தில் உள்ளது கோண்டா மாவட்டம். இந்த மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் தன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 சகோதரிகள் மீது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 2 மணிக்கு மொட்டை மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்து ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டார். தன் 3 பெண்களின் அழுகுரல் கேட்ட தந்தை அறைக்குள் சென்று பார்த்த போது மூவரும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்க, அவர்களை பத்திரமாக மீட்டு கோண்டா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பாதிக்கப்பட்ட 3 சகோதரிகளில், 17 வயதான மூத்த பெண்ணுக்கு 30 சதவீத காயமும், 12 வயதான இரண்டாவது சகோதரிக்கு 20 சதவீத காயமும், 8 வயதான மூன்றாவது சகோதரிக்கு 5 முதல் 7 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோண்டா மாவட்டத்தில் உள்ள அந்த கிராமத்தில் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்து வரும் அந்த பெண்களின் தந்தையிடமும், அக்கம் பக்கம் வீட்டினரிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலேந்திர குமார் பாண்டே, “ஆசிட் வீசிய நபர்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அடையாளம் காட்டவில்லை, பெயரும் குறிப்பிடவில்லை. எனவே, தெரியாத நபர்கள் மீதான புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இதில் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த நபருக்கு பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம்” என்றார். மேலும், தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

க்ரைம் – கொலை முயற்சி

சம்பவம் 2:

உத்திர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் ரோடா கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 65 வயதான அமர் என்பவர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, சோனு யாதவ் என்பவர், சில நாட்களுக்கு முன்பு அமரின் மகனை கோடரியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தந்தையும் மகனும் காவல்துறையில் புகாரளித்தால், இந்த விஷயத்தை பேசி தீர்த்துக் கொள்ளவும், புகாரை வாபஸ் பெறவும் யாதவ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு தந்தை, மகன் இருவரும் மறுக்கவே, சோனு யாதவ் அமரை சிறுநீரைக் குடிக்குமாறு துன்புறுத்தியுள்ளார். இது குறித்து அமர் அளிக்கப்பட்டுள்ள புகாரில், “என்னை சிறுநீர் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள், நான் மறுக்கவே, அவர் என்னை தடியால் அடித்தார். அப்போது அதைத் தடுக்க வந்த என் மகனையும் அடித்துக் கொடுமைப்படுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் லலித்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா மன்சார் பேக், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சோனு யாதவை தேடி வருவதாகவும் தெரிவித்தார். ரோடா கிராமத்தில் செல்வாக்கு மிக்க இரண்டு நபர்கள் இதில் சம்பந்தபட்டுள்ளனர், தகவல் கிடைத்தவுடன் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததோடு குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறினார். மேலும், பொது மக்களை எந்தவிதத்திலும் கொடுமைப்படுத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.

போலீஸ்

இந்த இரண்டு சம்பவங்களும் உத்திரபிரதேசம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.