15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு: பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம் – அமீரகத்தில் தொலைநோக்கி இல்லாமல் நாளை பார…

துபாய்,
பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது. இதனால் விரைவாக சூரியனை சுற்றி வரும் பூமி 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகத்தை அருகில் சந்திக்கிறது. இதில், அமீரக நேரப்படி நாளை (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு செவ்வாய் கிரகம் வானில் பிரகாசமாக தோன்றும். நாளை பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது.

அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்தே இந்த அரிய நிகழ்வு நடைபெறும். எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது செவ்வாய் கிரகம் இன்னும் பெரிதாகவும், பிரகாசமாகவும், அருகிலும் தெரியும்.
இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதிவரை காணலாம். நாட்கள் கடந்து செல்ல செல்ல தொலைவும் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் பார்ப்பதற்கு குறையும். பொதுமக்கள் சூரிய மறைவுக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இதுபோல வானில் இந்த காட்சி தோன்றும்.
நள்ளிரவு நேரமாக இருந்தால் நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது புள்ளியாக ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும். அமீரகத்தில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபடுவோர் மற்றும் வானியல் நிபுணர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.