தனிஷ்க் விளம்பரம் லவ் ஜிகாத்துக்கு ஆதரவாம்.. ஜுவல்லரிக்குள் புகுந்து மேலாளரை மிரட்டிய கும்பல்

தனிஷ்க் விளம்பரம் லவ் ஜிகாத்துக்கு ஆதரவாம்.. ஜுவல்லரிக்குள் புகுந்து மேலாளரை மிரட்டிய கும்பல்

|

காந்திநகர்: லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விளம்பர காட்சியை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, வலதுசாரி அமைப்பினரால், குஜராத்திலுள்ள தனிஷ்க் நகைக்கடை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தைச் சேர்ந்தது தனிஷ்க் ஜுவல்லரி. நாடு முழுக்க இதற்கு பல கிளைகள் உள்ளன.

பண்டிகை சீசன் நெருங்கும் நிலையில், தனிஷ்க் ஒரு விளம்பரம் வெளியிட்டது. தங்கள் நகைகளில், பல தரப்பட்ட விஷயங்களும் கோர்த்து அலங்கரிக்கப்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில், ‘ஏகத்வம்’ என்ற தீம் அடிப்படையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டது.

இஸ்லாமிய வீட்டில் வளைகாப்பு

அதில், இஸ்லாமியரை மணந்த இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடப்பது போல காட்சி இருந்தது. மருமகள் தனது மாமியாரிடம், “அம்மா உங்க வீட்டில் இது பழக்கமில்லையே” என்று கேட்பார். அதற்கு மாமியார், “மகள்களை சந்தோஷமா வச்சிக்கிறது எல்லா வீட்டிலும் பழக்கம்தானே” என்று பதில் சொல்வார். ஹிந்தி மொழியில் இந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

லவ் ஜிகாத்

லவ் ஜிகாத்

இந்த நிலையில்தான், லவ் ஜிகாத்தை (திருமணம் மூலம் மதமாற்றம்) இவ்விளம்பரம் ஆதரிப்பதாக கூறி வலதுசாரி அமைப்பினர் சமூக வலைத்தளங்களில், தனிஷ்க் ஜுவல்லரியை புறக்கணிக்க வேண்டும் என்று ஹேஷ்டேக் ஓட்டினர். மற்றொரு பக்கம், இதில் தப்பு இல்லை என்று, பல நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.

தனிஷ்க் ஜுவல்லரி விளக்கம்

இதையடுத்து நேற்று தனிஷ்க் ஜுவல்லரி சார்பில் ஒரு விளக்கம் டுவிட்டர் வழியாக வெளியானது. அதில், இந்த சவாலான நேரத்தில் பல்வேறு தரப்பு மக்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நிற்பதை கொண்டாடுவதும், ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதும் ஏகத்வம் விளம்பர பின்னணியில் உள்ள யோசனை. ஆனால் இந்த வீடியோ அதன் குறிக்கோளுக்கு மாறாக, மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளை தூண்டிவிட்டது. கவனக்குறைவாக, உணர்ச்சி கொந்தளிப்புக்கு காரணமாகியதால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் ஊழியர்கள், பார்ட்னர்கள் மற்றும் கடை ஊழியர்களின் நலனை மனதில் வைத்து இந்த வீடியோவை திரும்பப் பெறுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

குஜராத்தில் கலாட்டா

குஜராத்தில் கலாட்டா

ஆனால், நேரடியாக தனிஷ்க் மன்னிப்பு கேட்கவில்லை என்று வலதுசாரியினர் சமூக வலைத்தளங்கலில் கூறி வந்தனர். இந்த நிலையில்தான் குஜராத்தின் காந்திதாம் பகுதியிலுள்ள தனிஷ்க் ஜுவல்லரிக்குள் புகுந்து வலதுசாரி அமைப்பினர் தகராறு செய்ததாகவும், மேலாளரை மிரட்டி, இந்த விளம்பரத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் இல்லை

தாக்குதல் இல்லை

அதேநேரம், ஜுவல்லரி தாக்கப்படவில்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. “இரண்டு பேர் காந்திதாமில் உள்ள தனிஷ்க் கடைக்கு வந்து மன்னிப்பு கேட்குமாறு கோரினர். கடை மேலாளரும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். ஆனால் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. எனவே போலீஸ் ரோந்து போடப்பட்டுள்ளது. கடை தாக்கப்பட்ட செய்தி தவறானது” என்று போலீஸ் அதிகாரி மயூர் பாட்டீல் , செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.