ரேலா மருத்துவமனையில் இருதயம், நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு ‘கிம்ஸ்’ மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரேலா மருத்துவமனையில் இருதயம், நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்கு ‘கிம்ஸ்’ மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சேர்மன் டாக்டர் முகமது ரேலா தகவல்

சென்னை, அக்.14

மிகவும் சிக்கலான, நாள்பட்ட இருதயம், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கும், ‘எக்மோ’ சிகிச்சையை அளிப்பதற்கும் விரிவான சிறப்பு சிகிச்சை மையம் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை குரோம்பேட்டை ரேலா இன்ஸ்டிடியூட் அண்டு மெடிக்கல் மருத்துவமனை, ஐதராபாத் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துமனையுடன் (கிம்ஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தம் ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி முன்னிலையில், ரேலா மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் முகமது ரேலா மற்றும் கிம்ஸ் மருத்துவமனை தலைவரும், இருதயம், நுரையீரல் மாற்று சிகிச்சை திட்ட இயக்குனருமான டாக்டர் சந்தீப் அட்டாவர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த விரிவான சிறப்பு சிகிச்சை மையம் டாக்டர் சந்தீப் அட்டாவர் தலைமையில் செயல்பட இருக்கிறது. இங்கு இருதயம், நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சையை அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் கொண்ட குழுவினர் அளிக்க உள்ளனர்.

எக்மோ சிகிச்சையானது நோயாளிகளின் இருதயம், நுரையீரல் இயல்பாக செயல்படும் வரை இருதயம், நுரையீரலை சிறப்பான முறையில் இயக்கும் அதிநவீன சிகிச்சை முறையாகும். சிறப்பு மையத்தை தொடங்கி வைத்த பிறகு, டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், எங்களின் பல்துறை அணுகுமுறை, மகத்தான திறமை மற்றும் எங்களின் சிறப்புமிக்க மருத்துவக் குழு ஆகியவற்றைக்கொண்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் சிறந்த பராமரிப்பை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்’ என்றார்.

டாக்டர் முகமது ரேலா கூறுகையில், “மருத்துவ முன்னேற்றமானது இருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பானதாகவும், சிறப்பானதாகவும் ஆக்கியுள்ளது. இந்தத் துறையில் எங்கள் மருத்துவமனை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்தவகையில் நாங்கள் கிம்ஸ் மருத்துவமனையுடன் சேர்ந்து சிறந்த சேவையை வழங்குவோம். இந்த மையத்தை தொடங்குவதன் மூலம் நோயாளி களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என உறுதி கூறுகிறேன்’’ என்றார்.

கிம்ஸ் மருத்துமனையின் தலைவர் டாக்டர் சந்தீப் அட்டாவர் கூறுகையில், ‘இருதயம், நுரையீரல் சார்ந்த இது போன்ற சிக்கலான விஷயங்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்க சிறப்பான மருத்துவ வல்லுனர்கள், உயர்நிலை தொழில்நுட்பம் மற்றும் சிறப்பாக பணியாற்றக் கூடிய ஊழியர்கள் உள்ளிட்ட ஒரு குழு தேவை. அதை ரேலா மருத்துவமனை உருவாக்கியுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், தொடர்ந்து அவர்களை சிறப்பாக கவனிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.