வடகிழக்கு பருவமழை: கடலூரில் பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கான ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழை:

கடலூரில் பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கான ஒத்திகை நிகழ்ச்சி

கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு

கடலூர், அக். 14–

வடகிழக்கு பருவமழை தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தீயணைப்புத்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புத்துறை இணைந்து பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்பது குறித்து ஒத்திகை மேற்கொண்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பது, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது, மரங்களை வெட்டி அகற்றுவது போன்ற பேரிடர் மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி பொதுமக்களையும், அவர்களது உடமைகளையும் எவ்வாறு மீட்பது என்று ஒத்திகை நடத்தி காட்டினர்.

பின்னர் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசுகையில், முதல்நிலை பொறுப்பாளர்கள் பேரிடர் காலங்களில் சிறப்பாகவும், சமூக அக்கறையுடனும் செயல்பட்டு ஒற்றுமையுடன் பேரிடர்களிலிருந்து மீட்க பாடுபட வேண்டும். முதல்நிலை பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு (எண்.220700, 233933, 221113, 221383) ஆகிய எண்ணிற்கும், கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருந்து, சிறு பாதிப்பாக இருந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், வருவாய் அலுவலர் பா.அருண்சத்தியா, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் செந்தில்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.