கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பை இடைநிறுத்திய அமெரிக்க நிறுவனம்: என்ன காரணம்?

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 83 இலட்சத்து 70 ஆயிரத்து 296 பேராக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 88 இலட்சத்து 53 ஆயிரத்து 887 பேரை கடந்துள்ளது.

இருப்பினும் உலகளவில் 10 இலட்சத்து 90 ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து ஒன்றே தீர்வு என வல்லரசு நாடுகள் முன்முரமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், அமெரிக்க மருந்தக நிறுவனமான ஜான்சன் & ஜான்சன், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆவணி மாதம் ரஷ்யா கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தாக ஸ்புட்னிக் V -யைக் அறிமுகம் செய்தது.ஆனாலும் குறித்த தடுப்பு மருந்து இன்னும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் எனும் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இரண்டு கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து மூன்றாம் கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அந்தத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட தன்னார்வலருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதால், கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகவீனம் அடைந்த நபருக்கு எவ்வாறான நோய் பாதிப்பு உள்ளது என்பது தெளிவாகாதபோதும், “தன்னிச்சை பாதுகாப்பு குழுவும் தன்னார்வலரின் சொந்த மருத்துவரும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

மூன்றாம் கட்டத்தில் இருந்த என்செம்பிள் பரிசோதனை முயற்சியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், மூன்றாம் கட்ட சோதனை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.