கோரிக்கை: வார சந்தை துவங்க விவசாயிகள்…ரிஷிவந்தியத்தில் வர்த்தகம் பாதிப்பு

ரிஷிவந்தியம்; தமிழகத்தில் நிபந்தனைகளுடன் வார சந்தைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வார சந்தைகள் துவங்கப்படாததால், வியாபாரிகள், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ரிஷிவந்தியம், அத்தியூர், கடுவனுார், வாணாபுரம் ஆகிய நான்கு கிராமங்களில் வார சந்தை நடக்கிறது. இதில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை அத்தியூரில் காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறும் கால்நடை சந்தையில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலர் தங்களுடைய ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, மாலை வரை காய்கறி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் சாதாரண நாட்களில் லட்சக்கணக்கிலும், பண்டிகை நாட்களில் கோடிக் கணக்கான ரூபாய்க்கும் வர்த்தகம் நடைபெறும் முக்கிய சந்தையாகும்.மேலும், ரிஷிவந்தியத்தில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வாரசந்தை கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் காய்கறி சந்தை நடைபெறும். இதில் நுாற்றுக்கணக்கான வியாபாரிகளும், சுற்று வட்டாரங்களில் உள்ள 8க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்பர்.கடுவனுாரில் சனிக்கிழமையிலும், வாணாபுரத்தில் வெள்ளிக்கிழமையிலும் நடைபெறும் காய்கறி சந்தையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர். மூன்று சந்தைகளிலும் பல்லாயிரம் ரூபாய் கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள், வார சந்தைகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.ஊரடங்கில், அவ்வப்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பொது போக்குவரத்து தொடங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இதையொட்டி பல்வேறு நிபந்தனைகளுடன் வார சந்தைகள் இயங்க அனுமதி அரசு அளித்துள்ளது.

இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வார சந்தைகள் நடைபெற தொடங்கியுள்ளன. ஆனால், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நான்கு கிராமங்களிலும் வார சந்தை தொடங்கப்படாமல் இருப்பதால், விவசாயிகள், வியாபாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.எனவே, வார சந்தை நடைபெறும் இடங்களை பி.டி.ஓ.,க்கள் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக சந்தை துவங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.