உடனடியாக ரூ. 50 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் சந்தானம்: இயக்குநர் பாராட்டு

 

பிஸ்கோத் பட வெளியீட்டுக்காக நடிகர் சந்தானம் ரூ. 50 லட்சம் கொடுத்து உதவியாக இயக்குநர் ஆர். கண்ணன் கூறியுள்ளார்.

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் – பிஸ்கோத். தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா, ஆடுகளம் நரேன், செளகார் ஜானகி போன்றோர் நடித்துள்ளார்கள். தீபாவளி தினத்தன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

பிஸ்கோத் படத்தைத் திரையரங்கில் வெளியிட்டது பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதாவது:

கரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100% நஷ்டம். ஏனென்றால், கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 16-ம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால் எந்தளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எங்களுக்குத்தான் தெரியும்.

ஊரடங்கு தளர்வை அரசாங்கம் அறிவித்ததும் இப்படத்தை ஓடிடியில் வெளியிடலாமா அல்லது திரையரங்கில் வெளியிடலாமா? என்று ஆலோசித்தோம். திரையரங்கில் வெளியிட்டால் ரசிகர்கள் வருவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடனும் தைரியத்துடனும் வெளியிட முடிவு செய்தோம்.

சந்தானம் இல்லையென்றால் இந்தப் படம் வெளியாக வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கிறது. ரூ. 50 லட்சம் இருந்தால்தான் இப்படத்தை வெளியிட முடியும், ஏதாவது உதவி செய்யுங்கள் என்று சந்தானம் வீட்டிற்குச் சென்று கேட்டேன். அவர் உடனே கொடுத்தார். தமிழகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணம் சந்தானம், ரவி டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தார், தேனப்பன் என்று பலரும் உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நடித்த சௌகார் ஜானகிக்கு இது 400வது படம்.

கரோனாவால் 9 மாதங்களுக்கான வட்டி மட்டுமே ரூ. 3 கோடி வந்துவிட்டது. பைனான்சியர் ராம் பிரசாத் அடுத்த படத்தில் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். வட்டியைக் குறைக்க வேண்டாம், இதுபோன்ற உதவியை செய்தாலே போதும் என்றார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.