தமிழில் விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் 3வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார். 

லாஸ்லியா, தனது தந்தை மரியநேசன் குடும்பத்தைப் பிரிந்து, கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு தன் தந்தையை மிகவும் பிடிக்கும் என்பதையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல முறை கூறி இருந்தார்.

இந்நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன், நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். லாஸ்லியாவும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து மனமுடைந்துவிட்டதாக எமோஜி போட்டு பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து லாஸ்லியாவின் எண்ணற்ற திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர் இயக்குநர் சேரன் தனது அப்பாவைப் போல இருப்பதால், லாஸ்லியா அவரை அப்பா என்றே அழைத்து வந்தார். மரியநேசனின் மறைவுக்கு சேரன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சேரன் பகிர்ந்துள்ளார்.

 

மரியநேசனின் உடல் கனடாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. சென்னையில் இருக்கும் லாஸ்லியா தற்போது இலங்கைக்கு விரைந்துள்ளார். லாஸ்லியா தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.