தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல… இது என் அப்பாவின் தாய்மை! #MyVikatan

அன்பும் அன்பு சார்ந்த ஓர் இடமும் இருக்கிறதென்றால், அது அப்பாவின் இதயமாகவே இருக்கும். எல்லா அப்பாக்களுக்கும் தன் மகள் குட்டி இளவரசியே. எல்லா மகள்களுக்கும் தன் அப்பா ஹீரோதான். எனக்கும் அப்படித்தான்.

ஓர் ஆணுக்கு இருக்கும் மிகப்பெரும் சவால் என்ன தெரியுமா? தன் மனைவியை அவள் தந்தை அவளைப் பேணியது போலவே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்!

அப்பா பாசம் – மாதிரிப் படம்

எந்தவொரு தீய பழக்கமும் இல்லாத அன்பான அப்பா எனக்கு. சைக்கிளில் சிறுகூடை போன்று ஒன்று அமைத்து, அதில் என்னை உட்காரவைத்து இந்த உலகை அவருக்கு முன்னால் நான் காண வேண்டும் என விரும்பிய என் அப்பா…

முதன்முதலில் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டுவிட்டு, நான் சிரித்துக்கொண்டிருக்க, சுவர் ஓரமாகத் தன் கண்ணீரை மறைத்துக்கொண்ட என் அப்பா…

என் அண்ணன் அவன் வயது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்க, என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்றதற்காக, நான் அழுததைக் கண்டு என் அண்ணனை அடிக்கச் சென்ற என் அப்பா… முதன்முதலில் கிரிக்கெட்டை எனக்கு அறிமுகம் செய்த என் அப்பா…

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைக் கண்டு மனதுக்குள் உடைந்துபோன என் அப்பா…

அப்பா பாசம் – மாதிரிப் படம்

இறுதியாக என்னை மணமுடித்து அனுப்பி வைக்கையில் விழியில் திரண்ட கண்ணீரைத் துடைக்கக்கூட இல்லாமல், “பார்த்து, பத்திரமா இருந்துக்கோ கண்ணு” என அழுகையினூடே கூறிய என் அப்பா…

இப்படி என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அப்பாவின் அன்பு மறக்க முடியாதது.

இதோ எனக்கு இன்று இரண்டு மகள்கள். என் மேல் என் அப்பா வைத்திருக்கும் அன்பைவிட… என் கணவர் என் மகள்களை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. என் மகள்களிடம் கேட்டால், அவர்களுடைய அப்பாதான் உலகிலேயே சிறந்தவர் என்பார்கள். ஆமாம், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களுடைய தந்தைதான் உலகிலேயே சிறந்த தந்தை.

ஒரு பெண் குழந்தை பிறக்கையில், ஒவ்வோர் ஆணும் சூப்பர் ஹீரோவாகப் பிறப்பெடுக்கிறான்!

அப்பா பாசம் – மாதிரிப் படம்

‘என் தலையைக் கொடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பேன்’ எனக் கூறும் வாய்ச்சொல் வீரர்களுக்கு இடையே, உண்மையாக உழைத்து, நேர்மையாகச் சம்பாதித்து தன் குடும்பத்தைக் காக்கும் ஒவ்வோர் அப்பாவும் மேன்மையானவர்களே.

தாய்மை என்பது பெண்மைக்கு மட்டுமே உரித்தானது என யார் சொன்னார்கள்? அது என் அப்பாவைப் போன்ற ஆண்களுக்கும் உரித்தானதே!

– விபா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.