சென்னையில் 39.40 லட்சம் வாக்காளர்கள்

சென்னை: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய, 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான பிரகாஷ், ரிப்பன் மாளிகையில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், நேற்று வெளியிட்டார்.

அப்போது, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய, 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல், 2021 ஜன., 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையதளம்இந்த சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.வரைவு வாக்காளர் பட்டியல், மாநகராட்சி மண்டல அலுவலகங்களான, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா, இல்லையா என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும்.மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், 2021 ஜன., 1ம் தேதிக்குள், 18 வயது நிறைவு செய்பவர்களாக இருப்பவர்கள், படிவம் – 6யை பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் – 7யை பூர்த்தி செய்தும் அளிக்கலாம்.பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் – 8யை பூர்த்தி செய்தும், சட்டசபை தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து, புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் – 8ஏ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், டிச., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும், இம்மாதம், 21, 22ம் தேதிகள், டிச., 12, 13ம் தேதிகள் ஆகிய நாட்களில், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.மேலும், www.elections.tn.gov.in பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவும், பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.சென்னை மாவட்டத்தில், 3,754 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.அதிகபட்சமாக பெரம்பூர் சட்டசபை தொகுதியில், 297 ஓட்டுச்சாவடிகளும் குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டசபை தொகுதியில், 169 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.பெயர் நீக்கம்இந்தாண்டு, பிப்., 14ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 19 லட்சத்து, 43 ஆயிரத்து, 556; பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்து, 2 ஆயிரத்து 223; இதர வாக்காளர்கள் எண்ணிக்கை, 1,013 என, 39 லட்சத்து, 46 ஆயிரத்து, 792 ஆக இருந்தது.தற்போது, நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில், சென்னை மாவட்டத்தில், 19 லட்சத்து, 39 ஆயிரத்து, 694 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து, 99 ஆயிரத்து, 995 பெண் வாக்காளர்கள் மற்றும், 1,015 இதர வாக்காளர்கள் என, 39 லட்சத்து, 40 ஆயிரத்து, 704 வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.மேலும், 10 ஆயிரத்து, 986 ஆண் வாக்காளர்கள், 9 ஆயிரத்து167 பெண் வாக்காளர்கள், எட்டு இதர வாக்காளர்கள் என, 20 ஆயிரத்து, 161 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.வாக்காளர் எண்ணிக்கை, குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 481 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டசபை தொகுதியில், 3 லட்சத்து, 6,189 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.