எங்கேயும் எப்போதும் கேட்காத ‛டியூன் : இசையமைக்கும் நடிகர் ஜெய்

எங்கேயும் எப்போதும் கேட்காத ‛டியூன் : இசையமைக்கும் நடிகர் ஜெய்

22 நவ, 2020 – 12:55 IST

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டியிழுத்தாய் என தன் காந்த கண்களால் ரசிகர்களை கட்டியிழுத்து, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, கலகலப்பு 2 என பல படங்களில் கலக்கி இப்போது தான் நடிக்கும் சிவசிவாவில் இசையமைப்பாளராக பாட்டுக்கு மெட்டு போடும் நடிகர் ஜெய் மனம் திறக்கிறார்.
*பகவதி படம் முதல் தற்போது நடிக்கும் படம் வரை திரை பயணம்5 வயதில் இருந்து சினிமாவில் இருக்கேன். தேவா அப்பாவுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்கு போக ஆரம்பித்தேன். பல பாடல் பதிவுகளை சின்ன வயதிலிருந்து பார்த்துள்ளேன். இசையை தேடி நான் நடிக்க வந்தது ஒரு விபத்து போன்றது. இயக்குனர் வெங்கடேஷ் பகவதில விஜய்க்கு தம்பியாக நடிக்க வைத்தார். அன்று முதல் இன்று வரை பல வெற்றி, தோல்வி பார்த்திருக்கேன். சினிமாவில் அப்படியே இருந்து விட முடியாது. நிறைய கற்றுக் கொண்டே இருக்கணும். சினிமாவில் நான் இருக்கிறது கடவுள் ஆசிர்வாதம்.
* டிரினிட்டி காலேஜ் ஆப் லண்டன்ல மியூசிக் படிச்ச நீங்க இசையமைப்பாளரா ஆனது நான் இசையமைக்கிறேன் என்ற செய்தி வந்த உடனே எனது நண்பர்கள், உறவினர்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து வாழ்த்தினாங்க. லேட்டாக வந்ததாக சிலர் கூறினர். இசை ஈஸி இல்லை… இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ரசிகர்களுக்கு பாட்டு பிடிக்கனும். நடிச்சுக்கிட்டு இசையமைக்க கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. கொரோனா நேரம் நிறைய பாட்டு கம்போஸ் பண்ணும் போது இயக்குனர் சுசீந்திரன் சிவசிவா படத்தில் நடிக்க, இசைக்க வைத்தார். இனி நல்ல கதைகளை தேர்வு செய்து ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்கள் பண்ணுவேன், இசையமைக்கவும் செய்வேன்.

* சுசீந்திரன், ஜெய் இணையும் படத்தில் நடிப்பது, இசையமைப்பது குறித்து சுசீந்திரனின் முப்பதாவது படம் சிவசிவா. அதுக்கு முன்னாடி நானும் சுசீந்திரனும் ஒரு சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் பண்ணி முடிச்சிட்டோம். அந்தப்படம் முடிச்ச உடனே அடுத்த கதையை சொல்லி இந்த படத்தில் நீங்க நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார், எனக்கு அவரோட திரும்ப அடுத்த படத்தில் வேலை பார்க்கிறது ரொம்ப வசதியா இருந்தது புடிச்சிருந்தது உண்மையிலேயே ஒரு தம்பிய எப்படி பார்த்துக் கொள்ளுவோமோ அந்த மாதிரி என்னை பார்த்து கொண்டார். ஒரு இயக்குனர் தினமும் சாப்டீங்களானு கேட்பாங்களா தெரியல. ஆனால் சுசி கேப்பாரு. இப்ப இருக்கும் இசையமைப்பாளர்கள் ரசனையில் கொஞ்சமாவது நம்ம பாட்டு இருக்கணும் தான் வேலை பார்க்கிறேன். மக்களுக்கு பிடிச்சு திரும்ப திரும்ப அந்த பாட்டு கேக்கணும். என் படம் என்பதால் ஸ்பெஷலா எதுவும் இசை அமைக்கலை. எனக்காக இல்லாமல் படத்தின் ஹீரோவுகாக இசையமைக்கிறேன்.
* உங்க குடும்பமே இசை குடும்பமாக இருக்கும் போது உங்கள் இசை குறித்த ஆலோசனைதேவா, சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா, போபோ சசி… என் முதல் உறவுகள். படப்பிடிப்பு நடக்கும் போது கம்போஸ் பண்ணி போபோ சசி, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் முரளிக்கு போட்டு காட்டினேன் இதுவரை எங்கேயும் கேட்காத டியூனா இருக்குதுன்னு சொன்னாங்க.
* நீங்கள் நடித்த படங்களில் பெரிய திருப்பம் கொடுத்த படங்கள் எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம், ராஜா ராணி படத்திற்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் நடித்த பின் இவ்வளவு தரமான படம் பண்ண முடியும்னு தெரிஞ்சது. மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி, துபாய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் 2010ல் தேர்வானது, வெளிநாட்டு இயக்குனர்கள் என்னை பாராட்டினாங்க. பெரிய விருது வாங்காத எனக்கு அவர்கள் பாராட்டு பெரிய விருதாக தெரிஞ்சது.

* பகவதி படத்திற்கு பின் சென்னை 28 ல் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது பகவதி படத்திற்கு பின் நான்கு ஆண்டு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். வாய்ப்புக்காக ஏறி, இறங்காத அலுவலங்களே கிடையாது. பார்க்காத அவமானங்கள் கிடையாது. அதன்பின் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் சென்னை 28. இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்தில் நடிக்க வைச்சாரு. வாழ்க்கையில எங்கே போக போறோம்னு தெரியாமல் நின்ற நேரம் வா உனக்கு ஒரு வழியை காட்டுறேனு கை பிடித்து கூட்டிட்டு போனார் வெங்கட்பிரபு.
* ஜெய் மார்க்கெட் நிலவரம் கூடி இருக்கா இல்ல அப்படியே தான் இருக்காகண்டிப்பாய் என்னோட மார்க்கெட் நிலவரத்தை நானும் தெரிந்துக் கொள்ள ஆசைப்படறேன். சென்னை 28ல் ஆரம்பிச்சு இப்போ வரை என் படங்களுக்கு மார்க்கெட். சம்பள நிலவரம் தெரியாது. நிறைய சம்பளம், குறைந்த சம்பளம்னு வேலை பார்க்கிறது இல்லை. எல்லா படத்துக்கும் எல்லா சம்பளத்துக்கும் 100 சதவீதம் உழைக்கிறேன்.
* வெப்சீரிஸ்-ல் நடித்த அனுபவம்கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே ஒரு கதை சொல்லி இருந்தார் எனக்கு அந்த கதை பிடித்துப் போயிருந்தது. அந்த படத்தோட பெயர் மேயாத மான். கால்ஷீட் பிரச்னையால் என்னால் நடிக்க முடியவில்லை. மீண்டும் அவர் என்னிடம் ஒரு படத்திற்காக அணுகியபோது தட்ட முடியவில்லை. ஆனால் வெப்சீரிஸ் என்று சொன்னார். முன்னணி நடிகர்கள் கூட இதில் நடிப்பதை பார்த்து நானும் நடிக்க ஒப்புக் கொண்டேன். தமிழில் முதலில் வெப்சீரிஸில் நடித்தது நான் தான். படத்துக்கும், வெப்சீரிஸ்க்கும் வித்தியாசம் இல்லை. இது ஒரு நல்ல அனுபவம்

* நீங்க, பிரேம்ஜி எல்லாம் எப்போ தான் கல்யாணம் பண்ண போறீங்க கல்யாணம் பற்றி கேட்டாலே ஆர்யாவை தான் சொல்வேன், ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணுவார்னு எதிர்பார்க்கலை, அடுத்து சிம்புவை தான் நான் கை காட்டணும். பிரேம்ஜி கல்யாணத்தை பற்றி அவரை படைத்த கடவுளுக்கே தெரியாது.
* உங்கள் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகும் படங்கள் அறம் கோபி நயினாருடன் ஒன்று, எண்ணித் துணிக பிரேக்கிங் நியூஸ் வெங்கட்பிரபுவின் பார்ட்டி கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன். விரைவில் எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு படத்தின் அறிவிப்பு வரும்.
* அஞ்சலி இல்லாம இந்த பேட்டியை முடிக்க முடியாது. அவரைப்பற்றி? நீங்க சொல்றது சரி தான் அஞ்சலி இல்லாம என்னோட பேட்டி வந்ததேயில்லை. ஒரு மாறுதலுக்கு அஞ்சலி இல்லாம இந்த பேட்டியை முடிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.